பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இதையொட்டி புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இன்று (நவ.5) மாலை அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்ள உள்ளார்.
கீழ ராஜ வீதி வழியாக அண்ணா சிலை செல்ல பாதயாத்திரை பயண திட்டம் வகுக்கப்பட்டது. ஆனால் அப்பகுதிகளில் மத வழிபாட்டு தலங்கள், பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள், மருத்துவமனைகள் இருப்பதால் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் எனக் கூறி அவ்வழியாக செல்ல காவல்துறை அனுமதி மறுத்தனர்.
காவல் ஆய்வாளர்கள் மருது, வேலுச்சாமி ஆகியோர் இதுகுறித்து பா.ஜ.க மாவட்ட அலுவலகத்தில் நேற்று இரவு 10.30 மணியளவில் மாவட்ட தலைவர் விஜயகுமார் மற்றும் நிர்வாகிகளிடம் இதற்கான நோட்டீசை வழங்கினர். ஆனால் அவர்கள் வாங்க மறுத்து போலீசாருடன் வாக்குவாதம் செய்துள்ளனர்.
இதையடுத்து பா.ஜ.க நிர்வாகிகள் காவல்துறையிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின் புதிய வழித்தடத்தில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மச்சுவாடியில் இருந்து, பிருந்தாவனம் வடக்கு ராஜவீதி, மேலராஜ வீதி வழியாக அண்ணா சிலை செல்ல காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. அண்ணா சிலை பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு அண்ணாமலை சிறப்புரை ஆற்றுகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“