தி.மு.க-வினர் நடத்தி வரும் தனியார் பள்ளிகளில் பிரெஞ்சு மொழி எதற்காக பயிற்றுவிக்கப்படுகிறது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷுக்கு, பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டமான சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு ரூ. 2,152 கோடி கல்வி நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை. இந்நிலையில், புதிய கல்விக் கொள்கையை ஏற்காவிட்டால் தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி கிடையாது என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருந்தார்.
குறிப்பாக, "மும்மொழிக் கொள்கையை பிற மாநிலங்கள் ஏற்கும்போது தமிழ்நாடு மட்டும் ஏற்க மறுப்பது ஏன்? புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்றுக் கொண்டால்தான் கல்வி நிதி விடுவிக்கப்படும். புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்காத பட்சத்தில் ரூ. 2 ஆயிரம் கோடியை விடுவிக்க சட்டத்தில் இடமில்லை. அரசியல் காரணங்களுக்காகவே தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு எதிர்க்கிறது" என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தமிழ்நாடு அளவில் மீண்டும் இந்தி திணிப்பை தூண்டும் விதமாக அமைந்துள்ளதாக பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர். பல சந்தர்ப்பங்களில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி முதலமைச்சர் ஸ்டாலின் வரை பலரும் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக தங்கள் நிலைப்பாட்டை கூறி வருகின்றனர். மறுபுறம், தி.மு.க-வினர் நடத்தி வரும் தனியார் பள்ளிகளில் மட்டும் இந்தி, பிரெஞ்சு போன்ற மொழிகள் பயிற்றுவிக்கப்படுகிறது என்றும், தமிழ்நாட்டின் அரசு பள்ளி மாணவர்கள் மட்டும் இருமொழிக் கொள்கையால் வஞ்சிக்கப்படுவதாகவும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்து வருகிறார்.
இந்த சூழலில், "செம்மொழி இருக்க, மும்மொழி எதற்கு?" என்று சென்னையில் அமைக்கப்பட்டுள்ள பேனரை தனது எக்ஸ் தள பக்கத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, தனது எக்ஸ் தள பக்கத்தில், "செம்மொழி இருக்க பிரெஞ்சு மொழி எதற்கு?
நீங்கள் ஏன் இந்த பதாகையை தி.மு.க-வினர் நடத்தும் பள்ளிகளுக்கு முன் வைக்கக்கூடாது?
அவர்கள் நடத்தும் பள்ளிகளில், வரும் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை குறைந்துவிடும் என்ற அச்சமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.