திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமான மூலம் கோவை வந்த, பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: “கோவை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜக-வினர் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது.
பா.ஜ.க கோவை மாவட்டத் தலைவர் அதிகாலையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது.
கோவையில் அமைதி சீர்குலைந்ததற்கு காரணம் காவல்துறையினர் தான். நாளை இதனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
காவல்துறை நடுநிலைமையோடு நடந்து கொள்ள வேண்டும். தவறு செய்யக்கூடிய அதிகாரிகள் தப்பிக்க முடியாது. உரிய ஆவணங்களை தொகுத்து நடவடிக்கை எடுப்போம். நடுநிலையோடு காவல்துறை நடந்து கொண்டால் கண்டிப்பாக பா.ஜ.க ஒத்துழைப்பு அளிக்கும்.
ஆனால், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக காவல்துறை நடந்து கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. குறிப்பாக, ஆ. ராசா குறித்து கருத்து சொன்னதற்காக ஒருதலைபட்சமாக காவல்துறை நடவடிக்கை எடுத்து பா.ஜ.க கோவை மாவட்ட தலைவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தை பதிவு செய்துள்ளது.
பா.ஜ.க தொண்டர்கள் உரிமைக்காக பேசினால் கைது என்பது கண்டனத்துக்குரியது. எங்களுக்கு காவல்துறையினர் மீது மரியாதை உள்ளது. ஆனால், கோவையை பொறுத்தவரை காவல்துறை நடந்து கொள்ளும் விதம் ஏற்றுக் கொள்வதாக இல்லை. நாளை கோவையில் பாஜக சார்பில் அறப்போராட்டம் நடைபெறும். காவல்துறை அதற்கான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். அதனை கடைபிடித்து போராட்டம் நடத்தப்படும்.
தேசம் முழுவதும் எங்குமே பா.ஜ.க வன்முறையை கையில் எடுத்ததில்லை. பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களை பொறுத்தவரை மத்திய அரசுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட அமைப்புகள் மீது நடவடிக்கை எடுத்ததற்காக பா.ஜ.க தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்துவது ஏற்புடையதல்ல' என தெரிவித்தார்.
செய்தி: பி. ரஹ்மான் கோவை மாவட்டம்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"