DMK Files 3: தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தி.மு.க. ஃபைல்ஸ் 3-ம் பாகம் என்று ஒரு ஆடியோ வெளியிட்டுள்ளார். அதில், முன்னாள் மத்திய அமைச்சரும் தி.மு.க துணை பொதுச் செயலாளருமான ஆ. ராசா, முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி ஜாஃபர் சேட் பேசுவது இடம்பெற்றுள்ளது.
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தி.மு.க மீது ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். தி.மு.க-வின் ஊழல்கள் மற்றும் முறைகேடுகளை அம்பலப்படுத்துவதாகக் கூறி, அண்ணாமலை தி.மு.க ஃபைல்ஸ் என்று ஊழல் பட்டியலை வெளியிட்டு வருகிறார்.
அண்ணாமலை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், தி.மு.க ஃபைல்ஸ் என முதல் பாகத்தை வெளியிட்டார். அதில், தி.மு.க அமைச்சர் துரைமுருகன், எம்.பி. ஜெகத்ரட்சகன் மற்றும் தி.மு.க-வின் மூத்த அமைச்சர்களின் சொத்து பட்டியல் இடம் பெற்றிருந்தது.
இதைத் தொடர்ந்து, அண்ணாமலை தி.மு.க ஃபைல்ஸ் 2-ம் பாகத்தை வெளியிட்டார். அதில், தமிழ்நாடு அரசுத் துறைகளில் பல்வேறு ஒப்பந்தப் பணிகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, தி.மு.க ஃபைல்ஸ் என ஆடியோ வடிவில் 3-வது பாகத்தை வெளியிட்டார். அந்த ஆடியோவில், திமுக எம்.பி. டி.ஆர். பாலு மற்றும் தமிழக உளவுத்துறை முன்னாள் தலைவர் ஜாஃபர் சேட் இடையேயான தொலைபேசி உரையாடல்கள் இடம்பெற்று இருந்தன.
இதையடுத்து, அண்ணாமலை, இன்று (17.01.2024) முன்னாள் மத்திய அமைச்சரும் தி.மு.க எம்.பி-யுமான ஆ.ராசா மற்றும் உளவுத்துறை முன்னாள் தலைவர் ஜாஃபர் சேட் இடையேயா அதொலைபேசி உரையாடல்கள் இடம்பெற்று உள்ளது.
அண்ணாமலை வெளியிட்டுள்ள இந்த தி.மு.க ஃபைல்ஸ் 3-வது பாகம் ஆடியோ தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த உரையாடலில், ஆ. ராசா மற்றும் ஜாஃபர் சேட் ஒரு வழக்க்கு விசாரணையை கையாளப்படுவது குறித்து பேசுகிறார்கள். ஆனால், அவர்கள் எந்த வழக்கு பற்றி பேசுகிறார்கள் என்பது தெளிவாக எதையும் குறிப்பிடவில்லை.
அண்ணாமலை இந்த ஆடியோவைப் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து பதிவிட்டிருப்பதாவது: “2 ஜி வழக்கு குறித்த சிபிஐ விசாரணையை திமுக எவ்வாறு கையாண்டது என்பது குறித்த ரகசியத்தை அம்பலப்படுத்தி வருகிறோம். இதில் சாட்சிகள் தயார் செய்யப்பட்டு, குறிவைக்கப்பட்டு, மிரட்டப்பட்டுள்ளனர். இவ்வாறுதான் 2ஜி விசாரணையை காங்கிரஸ் அரசு நடத்தியுள்ளது. இத்துடன் இது முடியப்போவதில்லை” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை வெளியிட்டுள்ள இந்த தி.மு.க ஃபைல்ஸ் 3-வது பாகம் ஆடியோக்களின் உண்மைத் தன்மை குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், ஆ. ராசா மற்றும் ஜாஃபர் சேட் தொலைபேசிய உரையாடல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“