மந்த கதியில் நடைபெற்று வரும் லிங்காபுரம் பாலப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வீடியோ வெளியிட்டு பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை லிங்காபுரம் அருகே இருந்த உயர் மட்ட மேம்பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதனால் காந்தவயல், காந்தையூர், மேலூர், ஆலூர், உளியூர் உள்ளிட்ட பழங்குடியின கிராமங்களை சேர்ந்த மாணவர்கள், விவசாயிகள் ஆபத்தான முறையில் பரிசலில் பயணம் செய்து வருகின்றனர். இந்த பாலத்தின் அருகே மற்றொரு உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.
இதனிடையே இதுகுறித்த வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில் "சிறுமுகை அருகே, லிங்காபுரம் மற்றும் காந்தவயல் கிராமங்களை இணைக்கும் உயர்மட்டப் பாலம், பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் மூழ்கியுள்ள நிலையில், பொதுமக்கள், விவசாயிகள், மாணவர்கள் என அனைவரும், தினமும் பரிசலில் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. அதிக ஆழமுள்ள ஆற்றின் இந்தப் பகுதியில், பரிசல் பயணம் என்பது மிகுந்த ஆபத்தானதாகும்.
ஒவ்வொரு ஆண்டும், பருவமழை காலத்தில், இந்த உயர்மட்டப் பாலம் வெள்ளத்தில் மூழ்குவது வாடிக்கையாகியிருக்கிறது. ஐந்து கிராம மக்கள், இதனால் பாதிக்கப்படுகின்றனர். இத்தனை முக்கியமான பகுதியில், புதிய உயர்மட்டப் பாலம் அமைக்கும் பணிகள், மிகவும் மந்த கதியில் நடந்து கொண்டிருப்பது, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
புதிய உயர்மட்டப் பாலம் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், பால வேலைகள் நிறைவுபெறும் வரையில், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலகட்டத்தில், விவசாயிகள், பெண்கள், மாணவர்கள், முதியவர்கள், குழந்தைகள் என, பொதுமக்கள் ஆபத்தான முறையில் பரிசலில் பயணம் செய்வதைத் தவிர்க்க, மாவட்ட நிர்வாகம், இலவச இயந்திர படகு வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்." என குறிப்பிட்டுள்ளார்.