‘அறிவியல் மொழிதான் எங்களின் மூன்றாவது மொழி’ என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பதிவுக்கு, “அண்டை மாநிலமான கேரளாவில் ஐ.சி.டி (ICT) பாடத்திட்டம் தமிழ் உட்பட மும்மொழிகளில் கற்பிக்கப்படுகிறது; தமிழ்நாட்டில் வெறும் வாய்ப் பேச்சு தான் செயலில் ஒன்றும் இல்லை” பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் ஆளும் தி.மு.க அரசுக்கும் மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசுக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. சமீப காலமாக தேசிய கல்விக் கொள்கை தொடர்பாகவும் அதில் மும்மொழி கொள்கை தொடர்பாகவும் தமிழ்நாடு அரசுக்கும் மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசுக்கும் இடையே பெரும் சர்ச்சையாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசு சமக்ர சிக்ஷா திட்டத்தை செயல்படுத்தியதற்காக மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.2,150 கோடி நிதியை விடுவிக்க வேண்டும் என்று தமிழக அரசு கேட்டது. இதற்கு மத்திய அரசு தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கையின்படி மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தினால் மட்டுமே நிதி அளிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது.
மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை திட்டம் தமிழ்நாட்டில் மறைமுகமாக இந்தியைத் திணிக்கும் முயற்சி என்று தி.மு.க திட்டவட்டமாக மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கைதான். மும்மொழிக் கொள்கை தேவை இல்லை என்பதில் மாநிலத்தில் ஆளும் தி.மு.க அரசு உறுதியாக உள்ளது.
இந்நிலையில், தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அறிவியல் மொழிதான் எங்களின் மூன்றாவது மொழி தேசிய கல்விக் கொள்கையை ஆராய்ந்தால் அது NEP 2020 அல்ல RSS 2020 என்பது புரியும். தமிழ்நாட்டின் கல்வி முறைதான் இந்திய கல்வி முறைக்கே தாயாக உள்ளது. எங்களின் மூன்றாவது மொழி C, C++, Java, AI போன்ற அறிவியல் மொழிகள்தான்” என்று எக்ஸ் சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பதிவைக் குறிப்பிட்டு, “தமிழ்நாட்டில் வெறும் வாய்ப் பேச்சு தான் செயலில் ஒன்றும் இல்லை” பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தளப்பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது: “6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு, தகவல் மற்றும் தகவல்தொடர்பு தொழில்நுட்பம் (ICT) பாடத்தினைக் கற்றுக் கொடுக்க, மத்திய அரசு வழங்கிய நிதியை ஏப்பம் விட்டுவிட்டு, வாட்சப்பில் வருவதை எல்லாம் பேச வெட்கமாக இல்லையா உதயநிதி ரசிகர் மன்றத் தலைவரே?
அண்டை மாநிலமான கேரளாவில், ICT பாடத்திட்டம் தமிழ் உட்பட மும்மொழிகளில் கற்பிக்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் வெறும் வாய்ப் பேச்சு மட்டும் தான், செயலில் ஒன்றும் இல்லை.
உங்க மகன் மட்டும் மும்மொழிகள் கற்கலாம், ஆனால் ஏழை எளியோரின் பிள்ளைகள், மும்மொழிகள் கற்கக் கூடாது என்று தடுக்கிறீர்களே? என்ன நியாயம் இது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.