“கர்நாடகா சென்று காவிரி குறித்து வாய்திறக்காமல் திரும்பியவர் மு.க. ஸ்டாலின்“: அண்ணாமலை விமர்சனம்
காவிரியில் நீரை பெற்று தர முடியாத அரசாக தி.மு.க அரசு திகழ்கிறது என தஞ்சாவூரில் அண்ணாமலை கூறினார். முன்னதாக, காவிரியின் கிளை ஆறான குடமுருட்டி ஆற்றில் நீர்வளம் சிறக்கவும், உலக நன்மைக்காவும் ஆரத்தி எடுத்து வழிபட்டார்.
annamalai | thanjavur | தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு சட்டமன்றத் தொகுதிக்கு உள்பட்ட நடுக்காவேரி பகுதியில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, `என் மண் என் மக்கள்' நடைப்பயணம் மேற்கொண்டார். முன்னதாக காவிரியின் கிளை ஆறான குடமுருட்டி ஆற்றின் படித்துறையில், ஆரத்தி எடுக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆற்றுக்குள் இறங்கி நடுப்பகுதியில் உள்ள மணல் திட்டுக்கு சென்ற அண்ணாமலை, காவிரில் ஆற்றில் நீர்வளம் சிறக்கவும், உலக நன்மைக்காவும் ஆரத்தி எடுத்து வழிபட்டார்.
பின்னர் நடைப்பயணத்தை தொடங்கிய அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “நெற்களஞ்சிய பகுதிக்கு வந்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் 8.25 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
Advertisment
இந்தாண்டு 3 லட்சம் டன் குறைந்து, 5.25 லட்சம் டன் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதனை நான் ஒரு குறியீடாக சொல்கிறேன். காவிரியில் நீர் இல்லாததால் மகசூல் குறைந்து விட்டது. காவிரியில் நீர் வர வில்லை என்றால் என்ன நடக்கும் என்பது இந்த ஒரு ஆண்டில் தெரிகிறது.
இப்பகுதியில் மீத்தேன், நிலக்கரி போன்ற திட்டங்கள் வரக்கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. ஆனால் தமிழக அரசு டெல்டா பகுதி மக்களை வஞ்சிக்கிறது. காவிரியில் நீரை பெற்று தர முடியாத அரசாக தி.மு.க அரசு இருக்கிறது. இந்தியா கூட்டணியில் தி.மு.க இடம் பெற்றுள்ள நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பெங்களூரு கூட்டத்துக்கு சென்று விட்டு காவிரி குறித்து வாயைத் திறக்காமல் வந்தார்.
மாநில அரசு காவிரியில் தண்ணீரைப் பெற்றுத் தராததால் மகசூல் குறைந்து விட்டது, கொள்முதலும் குறைந்துவிட்டது. கடந்த 1924-ம் ஆண்டு போடப்பட்ட காவிரி ஒப்பந்தத்தை 1974-ம் ஆண்டு கருணாநிதி புதுப்பிக்கத் தவறினார். இதனால் கர்நாடகத்தில் ஹேமாவதி, கபினி என வரிசையாக அணை கட்டப்பட்டது. எனவே, கடந்த 80 ஆண்டுகளாக காவிரியில் அரசியல் காரணங்களுக்காக நிறைய விஷயங்கள் விட்டுக் கொடுக்கப்பட்டது என்றார்.
இந்த நிலையில், சாரல் மழைக்கு நடுவே அண்ணாமலையின் நடைபயணம் தொடர்ந்தது. விவசாயியாக வயலில் இறங்கி நாற்றும் நட்டார்.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“