ஆந்திராவின் புதிய முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டார். அப்போது, விழா மேடையில் அமித் ஷா, தமிழிசையிடம் கண்டிப்பது போல் பேசியது வைரலானது.
இதற்கிடையில் தமிழ்நாடு பா.ஜ.க.வில் உட்கட்சி பூசல் இருப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. முன்னதாக மக்களவை தேர்தல் தோல்வி குறித்து பேசிய தமிழிசை சௌந்தரராஜன், “கூட்டணி அமைத்து போட்டியிட்டிருக்க வேண்டும்” என்றார். மேலும், “நானும் பா.ஜ.க.வில் தலைவர் பொறுப்பை வகித்துள்ளேன்” என்றார்.
இதற்கிடையில் அன்றைய தினமே அ.தி.மு.க. பா.ஜ.க கூட்டணி முறிவுக்கு அண்ணாமலைதான் காரணம் எனக் கூறினர். இதனால், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் அமித் ஷா கண்டிப்பது போல் பேசியது இந்த விவகாரத்தை மனதில் வைத்துதான் என சிலர் கொளுத்திப் போட்டனர். இந்த விஷயம் பெரிதான நிலையில், விளக்கம் அளித்த தமிழிசை, தேர்தல் குறித்துதான் அமித் ஷா என்னிடம் பேசினார் என ட்விட்டர் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் இன்று அண்ணாமலை, தமிழிசை சந்திப்பு நடைபெற்றது. இது குறித்து பேசிய அண்ணாமலை, “மூத்த பாஜக தலைவர்களில் ஒருவரும், மாநிலத் தலைவராகத் திறம்படச் செயல்பட்டவருமான தமிழிசையை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தமிழகத்தில் தாமரை நிச்சயம் மலரும் என்பதை உறுதியுடன் கூறியவர் தமிழிசை.
அவரின் அரசியல் அனுபவமும், ஆலோசனைகளும் கட்சியின் வளர்ச்சிக்கான உத்வேகத்தைத் தொடர்ந்து அளித்துக் கொண்டிருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“