தமிழக பாஜக மாநிலத் தலைவர் கு.அண்ணாமலை வேங்கைவயல் விவகாரம் குறித்து ட்விட்டர் எக்ஸ் சமூக வலைதளத்தில், “வேங்கைவயல் சம்பவம் நடந்து ஒரு ஆண்டு கடந்து விட்டது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களே, இத்தனை ஆண்டுகள் நீங்கள் போட்டு வைத்திருந்த உங்கள் சமூக நீதி வேஷம் கலைந்து, மக்கள் முன் உங்கள் உண்மை முகம் அம்பலப்பட்டு ஒரு ஆண்டு ஆகிறது.
/indian-express-tamil/media/media_files/1WBCrOJ3VVM2iMSi312i.jpg)
பொதுமக்களை வெறும் வாக்குகளாக மட்டுமே பார்க்கும் திமுகவின் கோரமுகம் முழுவதுமாக வெளிப்பட்டு ஒரு ஆண்டு ஆகிறது.
தமிழகத்தில், 30% பள்ளிகளில், பட்டியல் சமூக மாணவர்களுக்கு எதிராக ஜாதிய வேற்றுமை, தீண்டாமை நிலவுகிறது என்று, நாளிதழ் செய்தி ஒன்று வெளிப்படுத்தியிருக்கிறது.
ஆனால், இன்னும் மேடைகளில், சமத்துவம் சமூக நீதி என்றெல்லாம், யாரோ எழுதிக் கொடுத்ததைப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். மக்கள் உங்கள் முகத்திற்கு நேராகவே சிரிக்கிறார்கள்.
இத்தனை ஆண்டுகளாக, மத்திய அரசு பட்டியல் சமூக மக்கள் நலனுக்காக ஒதுக்கும் நிதியை எடுத்து, உங்கள் வாக்கு அரசியலுக்காக வேறு திட்டங்களுக்குச் செலவிட்டீர்கள் அல்லது செலவே செய்யாமல் திருப்பி அனுப்பினீர்கள்.
பொதுமக்களுக்கு அதன் வீரியம் புரியவில்லை. காலாகாலமாக நீங்கள் நடித்து வரும் மேடை நாடகங்களை நம்பியிருந்தார்கள். ஆனால், இனியும் அவர்கள் ஏமாறத் தயார் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ் ட்விட்டர் எக்ஸில், “புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கான குடிநீர் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட அருவருக்கத்தக்க நிகழ்வு நடந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்து விட்டது.
குற்றவியல் விசாரணையில் ஓராண்டு என்பது மிக நீண்ட காலம். ஆனால், இவ்வளவு காலம் கடந்தும் கூட வேங்கைவயல் கொடூரத்திற்கு காரணமானவர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை; தண்டிக்கப்படவில்லை என்பது வேதனையளிக்கிறது. இந்த சிக்கலில் தமிழக அரசு மற்றும் காவல்துறையின் அலட்சியம் கண்டிக்கத்தக்கது.
/indian-express-tamil/media/media_files/oE2mZL5iuDu7fjfKyPj2.jpg)
வேங்கைவயல் குற்றவாளிகள் தண்டிக்கப்படாததன் விளைவாக தமிழகத்தின் பல பகுதிகளில் அதே போன்ற நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன. அது குறித்த செய்திகள் வெளியில் வந்தால் ஏற்படும் விளைவுகளுக்கு அஞ்சி, அந்த நிகழ்வுகள் மூடி மறைக்கப்படுகின்றன.
இதே நிலை தொடரக்கூடாது. அதை உறுதி செய்வதற்காக வேங்கைவயல் கொடூரத்தின் பின்னணியில் உள்ள அனைவரையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“