சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் புதன்கிழமை (அக்.25,2023) பெட்ரோல் குண்டு வீசினார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பெட்ரோல் குண்டு வீசிய நபரை வளைத்துப் பிடித்தனர். பின்னர் அவரிடம் இருந்து 3 குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில் அவர் கருக்கா வினோத் என்பதும் இரண்டு நாள்களுக்கு முன்புதான் பிணையில் சிறையில் இருந்து வெளியே வந்ததும் தெரியவந்தது.
இந்த நிலையில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை தமிழக அரசுக்கு கேள்வி ஒன்று எழுப்பி உள்ளார். அதில், “ஆளுனர் தலைமேல் பெட்ரோல் குண்டு போட்டால்தான் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என திமுக ஒத்துக்கொள்ளும்.
இரண்டு நாள்களுக்கு முன்பு சிறையில் இருந்து வந்தவரை கண்காணிக்க முடியவில்லை என்றால் இங்கிருக்கும் சகோதர -சகோதரிகளுக்கு என்ன நம்பிக்கையை கொடுக்க முடியும்” எனக் கேள்வியெழுப்பி உள்ளார்.
தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் கு. அண்ணாமலை தற்போது என் மண் என் மக்கள் நடைபயணத்தில் உள்ளார். இந்த நடைபயணம் மூலம் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று மக்களை அவர் சந்தித்துவருகிறார்.
ஆளுனர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் ஆளுனர் மற்றும் அமைச்சர்கள் தரப்பு இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“