இந்த மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில், தி.மு.க கூட்டணி, அ.தி.மு.க கூட்டணி, பா.ஜ.க கூட்டணி மூன்று கூட்டணிகள் போட்டியிடுகின்றன. சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகின்றன.
தமிழ்நாட்டில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணியில், பா.ம.க, த.மா.கா, அ.ம.மு.க, புதிய நீதிக்கட்சி, ஐ.ஜே.கே, த.ம.மு.க உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, தமிழ்நாட்டில் 39 இடங்களுக்கான தொகுதிப் பங்கீட்டை முடித்துள்ளது. அதன்படி, பா.ஜ.க 20 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகிறது. அன்புமணி ராமதாஸ் தலைமையிலன பா.ம.க 10 தொகுதிகளிலும் ஜி.கே. வாசன் தலைமையிலான த.மா.கா 3 தொகுதிகளிலும், டி.டி.வி தினகரன் தலைமையிலான அ.ம.மு.க 2 தொகுதிகளிலும் ஏ.சி.எஸ் தலைமையிலான புதிய நீதிக் கட்சி, ஜான் பாண்டியன் தலைமையிலான தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், பாரிவேந்தர் தலைமையிலான இந்திய ஜனநாயகக் கட்சி தலா 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு தொகுதிப் பங்கீடு எதுவும் அறிவிக்கவில்லை.
இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் 20 தொகுதிகளில் பா.ஜ.க நேரடியாகப் போட்டியிடுகிறது என்று கூறிய அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஓ.பி.எஸ் எப்போது வேண்டுமானாலும் செய்தியாளர்களைச் சந்திக்க வாய்ப்பு இருக்கிறது என்று சஸ்பென்ஸ் வைத்துள்ளார்.
பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை சென்னையில் வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “ஒரு மகிழ்ச்சியான செய்தி. தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கான தொகுதிப் பங்கீட்டை முடித்துள்ளது. கூட்டணி கட்சித் தலைவர்களுடன் கலந்துபேசி 39 தொகுதிகளுக்கும் பங்கீடு முடிவடைந்துள்ளது. பா.ஜ.க-வின் வேட்பாளர்கள் 20 தொகுதிகளில் போட்டியிட உள்ளனர். பா.ஜ.க.வின் சின்னத்தில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் மேலும் ஒரு 4 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.
இந்த 24 வேட்பாளர்கள் பட்டியல் உடன் தலைவர்கள் இன்று புதுடெல்லி செல்ல இருக்கின்றோம். பா.ஜ.க சார்பில் போட்டியிடும் 20 வேட்பாளர்கள் மற்றும் பா.ஜ.க சின்னத்தில் போட்டியிடும் 4 வேட்பாளர்கள் உள்பட 24 பேரின் வேட்பாளர் பட்டியலை இன்று மாலையில் இருந்து எந்தநேரத்திலும் வெளியாகலாம். அதேபோல், கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் அவர்களது கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அவர்கள் அறிவிப்பார்கள்.
பா.ஜ.க ஒரு தேசிய கட்சி. ஒரு மாநிலத் தலைவர் இங்கிருந்து வேட்பாளர்களை அறிவிப்பது வழக்கம் அல்ல. எனவே, அதற்கான அனைத்து தகவல்களையும் இங்கிருந்து தலைமைக்கு அனுப்பிவிட்டோம். எங்கள் கூட்டணியில், சுமுகமாக, மகிழ்ச்சியாக, திருப்திகரமாக எல்லோருக்கும் என்ன வேண்டுமோ அது கிடைத்திருக்கிறது. அனைவரும் வளர வேண்டும் என்ற அடிப்படையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் பங்கீடு முடிந்திருக்கிறது.
தமிழகத்தில் ஒரு மாற்று அரசியல் வரவேண்டும் என்றால், அதில் பல கட்சிகள் இருக்க வேண்டும். பல வண்ணங்களும், சின்னங்களும் இருக்க வேண்டும். அனைத்து சமூகத்தில் இருந்தும் தலைவர்கள் இருக்க வேண்டும். அப்போதுதான், மக்களுக்கு அந்த கூட்டணியின் மீது ஒரு நம்பிக்கை வரும். திராவிட அரசியலுக்கு மாறுபட்ட அரசியலை பா.ஜ.க முன்னெடுக்கிறது. அதற்கான ஒரு பெரிய முயற்சி இந்த 2024 மக்களவைத் தேர்தல். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தமிழக மக்கள் 39 தொகுதிகளிலும் மிகப் பெரிய ஆதரவு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது” என்று அண்ணாமலை கூறினார்.
அப்போது, த.மா.கா, ஓ.பி.எஸ் உடனான பேச்சுவார்த்தை குறித்து செய்தியாளர்கள் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்ட அண்ணாமலை கூறியதாவது: “த.மா.கா.வைப் பொறுத்தவரை 3 இடங்களில் போட்டியிடுகின்றனர். அது தொடர்பாக அவர்கள் அறிவிப்பார்கள். அது குறித்து நான் அறிவிப்பது முறையாக இருக்காது. அதேபோல், ஓ.பி.எஸ் எப்போது வேண்டுமானாலும் செய்தியாளர்களைச் சந்திக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே, அது தொடர்பாகவும் நான் கூறுவது சரியாக இருக்காது. முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் விரைவில் செய்தியாளர்களைச் சந்திப்பார்” என்று ஓ.பி.எஸ் குறித்து அண்ணாமலை சஸ்பென்ஸ் வைத்தார்.
இந்தநிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் தொகுதி ஓ.பி.எஸ் தரப்புக்கு ராமநாதபுரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.