Annamalai says BJP will contest separately in Local body elections: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுவதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 28 ஆம் தேதி தொடங்கியது. இதனையடுத்து கட்சிகள் தேர்தல் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் தேமுதிக, நாம் தமிழர் கட்சி, பாமக, மக்கள் நீதி மய்யம், அமமுக உள்ளிட்ட கட்சிகள் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளன.
திமுக கூட்டணியைப் பொறுத்தவரை, சட்டமன்ற தேர்தலில் கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகள், இந்த தேர்தலிலும் ஒன்றாக களம் காண்கின்றன. இந்த கூட்டணியின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை மாவட்ட அளவில் நடைபெற்று கிட்டதட்ட இறுதி கட்டத்தில் உள்ளது.
ஆனால் மறுபுறும் அதிமுக கூட்டணியில், முக்கிய கூட்டணி கட்சியும் மத்தியில் ஆளும் கட்சியுமான பாஜக அதிக இடங்களை கேட்டு பேரம் பேசி வந்தது. அதிமுக- பாஜக இடையே மாநில அளவில தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
இதற்காக தமிழக பா.ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை, பொன்.ராதா கிருஷ்ணன், வானதி ஸ்ரீநிவாசன் உள்ளிட்டோர், அதிமுக தலைமை கழகத்துக்கு சென்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது சென்னை மாநகராட்சியில் 30 வார்டுகளும், கோவை, திருப்பூர், நாகர்கோவில் போன்ற மாநகராட்சி மேயர் பதவிகளும் ஒதுக்க வேண்டும் என்று பாஜக தரப்பில் வலியுறுத்தப்பட்டதாகவும், அதிமுக - பாஜக இடையே இட பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் கடலூர் மாநகராட்சி, சிதம்பரம், விழுப்புரம், திண்டிவனம், விருத்தாச்சலம், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, திட்டக்குடி, கோட்டக்குப்பம், தருமபுரி ஆகிய நகராட்சிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அதிமுக நேற்று வெளியிட்டது. 298 பேர் கொண்ட முதற்கட்ட பட்டியல் வெளியாகி உள்ள நிலையில் இன்று 2-வது கட்ட பட்டியலை வெளியிட அதிமுக தயாராகி வருகிறது.
மேலும் பாஜகவுடன் கூட்டணியை இறுதி செய்த பின்னர், மற்ற தொகுதிகளுக்கான பட்டியலை வெளியிட அதிமுக முடிவு செய்தது.
இதனிடையே, உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவிடம் பாஜக 25% வரை இடங்கள் கேட்டதாகவும், ஆனால் அதிமுக தரப்பில் 4 முதல் 5 % இடங்களே தர முடியும் என கூறப்பட்டதாகவும் தகவல் வெளியானது. மேலும் பாஜக கொங்கு மண்டலத்தில் அதிக இடங்களை கேட்பதால், இரு தரப்புக்குமான பேச்சு வார்த்தை இழுபறியில் நீடித்து வந்தது.
இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட உள்ளதாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். அதேநேரம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டாலும், தேசிய ஜனநாயக கூட்டணியில் தோழமை தொடரும் என்றும், 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக இணைந்தே தேர்தலை சந்திக்கும் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.
மேலும், தனித்து போட்டி என்பது கடினமான முடிவு அல்ல. தொண்டர்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்துள்ளோம். பாஜகவுக்கு என்ன வலு இருக்கிறது என்பது எங்களுக்கு தெரியும். ஒபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகிய இருவரும் நான் நேசிக்க கூடிய தலைவர்கள் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil