பள்ளிகளில் சாதி மோதல்களை தடுப்பது தொடர்பான முன்னாள் நீதிபதி சந்துருவின் அறிக்கையை பா.ஜ.க ஏற்கவில்லை என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று பா.ஜ.க.,வின் செயற்குழு கூட்டம் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மக்களவைத் தேர்தல் தோல்வி, உட்கட்சி விவகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அண்ணாமலை, “தமிழகத்தில் கள்ளச்சாராய புழக்கம் அதிகரித்துள்ளது. இதனால் மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமி பதவி விலக வேண்டும். தமிழ்நாட்டில் மணல் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்க செல்லும் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். ஆனால் தாக்குவோர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அரசு அதிகாரிகளுக்கு தமிழகத்தில் பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது. வி.ஏ.ஓ.,க்கள் துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு பெறும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு உள்ளது.
நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் இரண்டு குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர். ஒன்று நீட் தேர்வு வினாத்தாள் கசிந்துள்ளது, மற்றொன்று நீட் தேர்வு நடத்தக்கூடிய தேசிய தேர்வுகள் முகமை அமைப்பின் மீது அதிருப்தி. எனவே நீட் தேர்வில் பிரச்சினை இல்லை. நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை தான் நடத்துகிறது. இதில் யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். நீட் தேர்வு குளறுபடி குறித்து மறு ஆய்வு செய்யப்பட்டு தவறு நடத்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் யாரையும் பாதுகாக்க விரும்பவில்லை. வினாத்தாள் கசிய விடுபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பா.ஜ.க.,வின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் சாதி மோதல்களை தடுப்பது தொடர்பான முன்னாள் நீதிபதி சந்துருவின் அறிக்கையை பா.ஜ.க ஏற்கவில்லை. பள்ளிகளில் ஜாதிக்கு கடிவாளம் போட வேண்டும் என்பது உண்மை தான். ஆனால் சந்துரு அறிக்கையை ஏற்க முடியாது. அந்த அறிக்கையில் ஏற்றுக் கொள்ள முடியாத பல அம்சங்கள் உள்ளன. அவற்றை செயல்படுத்தினால், பள்ளி கல்லூரிகளில் மேலும் ஜாதி ரீதியிலான பிரச்னைகள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. கள்ளர், ஆதிதிராவிடர் பள்ளிகளை பள்ளிகல்வித்துறையின் கீழ் கொணடு வரக்கூடாது. ஆசிரியர்களை ஜாதி பார்த்து தேர்வு செய்து ஜாதி பார்த்து வேலை வழங்குவதை ஏற்க முடியாது. அகர வரிசைப்படி மாணவர்கள் அமர வேண்டும் என்ற அறிவுறுத்தல் எப்படி சரியாக இருக்க முடியும். ஆக்கப்பூர்வமாக முடிவு எடுக்காமல் கையில் கயிறு கட்டி இருப்பது, விபூதி குங்குமத்தை வைத்து அடையாளப்படுத்துவது சரியல்ல. பள்ளிகளில் தேர்தல் நடத்தினால் ஜாதி அரசியல் தான் அதிகரிக்கும்.” இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“