Annamalai says Election commission’s explanation is unacceptable: மத்திய அமைச்சர் எல்.முருகன் வாக்கு செலுத்திய விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் விளக்கம் ஏற்றுக் கொள்ள முடியாது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மத்திய அமைச்சர் எல்.முருகனின் வாக்கை வேறு ஒருவர் செலுத்தி விட்டதாக அண்ணாமலை தெரிவித்திருந்தார். மேலும், மத்திய அமைச்சர் முருகனின் வாக்கு சென்னை அண்ணாநகர் கிழக்கில் உள்ள வாக்குச் சாவடியில் வேறு ஒரு நபரால் கள்ள வாக்காக போடப்பட்டுவிட்டது. மாநில தேர்தல் ஆணையர் இப்போதாவது நடவடிக்கை எடுப்பாரா? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.
இது குறித்து தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்குச் சென்றபோது, மத்திய அமைச்சர் எல்.முருகன் வாக்களிக்க உள்ள அண்ணா நகர் கிழக்கில் உள்ள வாக்குச் சாவடியில் முருகன் என்ற பெயரில் இரண்டு வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஒருவர் வாக்கு செலுத்திவிட்டார். இன்னொருவர் வாக்கு செலுத்தப்பட வில்லை. எனவே மத்திய அமைச்சர் தனது வாக்கை செலுத்தலாம் என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது.
இதையும் படியுங்கள்: சென்னையில் கள்ள ஓட்டு போட்ட திமுக?.. வீடியோ ஆதாரத்துடன் காவல் ஆணையரிடம் அதிமுக புகார்
பின்னர் மத்திய அமைச்சர் எல்.முருகன், தனது வாக்கை செலுத்தினார். அதன்பின், மத்திய அமைச்சர் எல்.முருகன், “எழுத்துப் பிழை காரணமாக இந்த தவறு நிகழ்ந்து விட்டதாக தேர்தல் அலுவலர்கள் தெரிவித்துள்ளார்கள். வேறு யாரும் என் ஓட்டை போடவில்லை” என்று விளக்கம் அளித்தார்.
இந்தநிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தேர்தல் ஆணையத்தின் விளக்கம் ஏற்றுக் கொள்ள முடியாதது என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், தேர்தல் அதிகாரிகள் மத்திய இணை அமைச்சர் திரு முருகன் அவர்களை வாக்களிக்க அனுமதித்து உள்ளார்கள். இது தமிழக பாஜகவின் போராட்டத்திற்கு பிறகு! அவருடைய வாக்காளர் பட்டியல் வரிசை எண் 1174, அவர் வருவதற்கு முன்பாகவே வாக்கு செலுத்தப்பட்டு இருந்தது. இதை செலுத்தியது யார்? அனுமதித்தது யார்? தேர்தல் அதிகாரிகள் இதை ‘எழுத்துப் பிழை’ என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு வாதம், என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil