/indian-express-tamil/media/media_files/2ykZ3Bj0nVMCFXqsVbDa.jpg)
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை "என் மண் என் மக்கள்" என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் நேற்றிரவு திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஸ்ரீரங்கம் ரெங்கபெருமானின் உத்தரவு நூறாவது தொகுதியாக இங்கே நான் வரவேண்டும் என்பதாக இருக்கிறது. இயற்கையாகவே 5 தொகுதிகளை ஒதுக்கி வைத்து இன்று நூறாவது தொகுதியாக அரங்கபெருமானின் மண்ணுக்கு வர வேண்டும் என அவர் முடிவு செய்து இருக்கிறார். தமிழகத்தில் முப்பது மாத திமுக ஆட்சி அனைத்து மக்களுக்கும் எதிரானதாகவே இருக்கின்றது.
1967 இல் திமுக தமிழகத்தை ஆளும் போது ஸ்ரீரங்கம் கோவிலில் ஒரு பலகையை வைத்திருக்கின்றனர் கடவுளை நம்புகிறவன் முட்டாள், ஏமாளி என ஒரு பலகையை இந்த கோயில் மட்டுமல்லாது எல்லா இந்து கோயில் முன்னதாகவும் வைத்திருக்கின்றனர். ஆனால் இந்துக்கள் நாம் அமைதியாக அறவழியில் வாழ்க்கையே வாழ்கிறோம்.
இன்றைக்கு இந்த ஸ்ரீரங்கம் மண்ணில் இருந்து பா.ஜனதா கட்சி உறுதி எடுத்துக் கொள்கிறது. தமிழகத்தில் பா.ஜனதா கட்சியினுடைய ஆட்சி வரும்பொழுது, முதல் வேலை அந்த சிலையை அப்புறப்படுத்தி நம்முடைய ஆழ்வார்களிலிருந்து, நாயன்மார்களிலிருந்து அவர்களுடைய சிலைகள் அங்கு வைக்கப்படும்.
தமிழ் புலவர்கள் சிலைகள் வைக்கப்படும். தமிழ் புலவர் திருவள்ளுவர் சிலை வைக்கப்படும். நம்முடைய சுதந்திரத்திற்கு பாடுபட்ட வீரர்கள் யாரெல்லாம் இருக்கிறார்களோ, அவர்கள் சிலைகள் வைக்கப்பட்டு வழிபடுவோம் தவிர, கடவுளை நம்புபவர்கள் முட்டாள் என்று சொல்லக்கூடிய சிலையை, பா.ஜனதா ஆட்சிக்கு வந்த முதல் நொடியிலேயே, தமிழகத்தில் உள்ள கோவில்கள் அருகில் வைத்துள்ள எல்லா சிலைகளையும் அகற்றி காட்டுவோம். அதுபோல் இந்து அறநிலைத்துறை அமைச்சரவை இருக்காது. இந்து அறநிலைத்துறை என்ற அமைச்சகத்தின் கடைசி நாள், பா.ஜனதா ஆட்சிக்கு வரும் முதல்நாளாக இருக்கும் எனப் பேசினார்.
அன்று மருது பாண்டியர்களின் ஜம்பு தீவு பிரகடனம் போல இது என் மண் என் மக்கள் யாத்திரையின் பிரகடனம் என் பேசி பெருத்த கைத்தட்டல் பெற்றார் அண்ணாமலை.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.