பா.ஜ.க ஐ.டி. விங் நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க-வுக்கு தாவியது குறித்து ஆங்கில ஊடகத்திடம் பேசிய பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, குருசேத்திர போர் தொடங்கிவிட்டது என்று தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க மாநில ஐ.டி. விங் தலைவர் சி.டி.ஆர் நிர்மல் குமார், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை வைத்துவிட்டு கட்சியில் இருந்து விலகுவதாக விட்டரில் அறிவித்தார். இதையடுத்து சில நிமிடங்களிலேயே சி.டி.ஆர் நிர்மல் குமார் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணைந்தார்.
இவரைத் தொடர்ந்து, பா.ஜ.க மாநில ஐ.டி. விங் செயலாளர் திலீப் கண்ணனும் அண்ணாமலை மீது குற்றச்சாட்டுகளை வைத்துவிட்டு கட்சியில் விலகுவதாக அறிவித்தபின், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணைந்தார்.
பா.ஜ.க ஐ.டி. விங் நிர்வாகிகள் சி.டி.ஆர். நிர்மல் குமார், திலீப் கண்ணன் அடுத்தடுத்து அ.தி.மு.க-வுக்கு தாவியது பரபரப்பை ஏற்படுத்தியது.
பா.ஜ.க உடன் கூட்டணியில் இருந்து கொண்டு பா.ஜ.க-வில் இருந்து நிர்வாகிகளை அ.தி.மு.க-வில் சேர்த்துக்கொண்டது குறித்து பா.ஜ.க-வினர் பலரும் .அதி.மு.க-வின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது விமர்சனங்களை வைத்தன்ர். இது கூட்டணி தர்மத்தை மீறுவதாகும் என்று விமர்சித்தனர்.
பா.ஜ.க ஐ.டி. விங் நிர்வாகிகளை அ.தி.மு.க-வில் இணைத்துக்கொண்டதற்கு கோவில்பட்டியில் பா.ஜ.க இளைஞரணியினர் எடப்பாடி பழனிசாமி உருவபொம்மையை எரித்து கண்டனம் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, பா.ஜ.க-வினர் உணர்ச்சிவசப்பட வேண்டாம். தார்மீக அடிப்படையில் கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு மரியாதை தர வேண்டும் என்று கூறினார்.
கோவில்பட்டியில் பா.ஜ.க-வினர் எடப்பாடி பழனிசாமி உருவபொம்மையை எரித்ததற்கு, எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க-வினர் இன்று (மார்ச் 08) ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதனிடையே, முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க மூத்த தலைவருமான ஜெயக்குமார், எடப்பாடி உருவபொம்மையை எரித்தவர்களை பா.ஜ.க-வில் இருந்து நீக்க வேண்டும். அ.தி.மு.க-வின் ஒன்றரைக் கோடி தொண்டர்கள் திரண்டெழுண்தால் பா.ஜ.க-வினர் தாங்கமாட்டார்கள் என்று எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பா.ஜ.க நிர்வாகிகள் அ.தி.மு.க-வுக்கு தாவியது குறித்த கேள்விக்கு பதிலளித்துப் பேசினார். பா.ஜ.க-வில் இருந்து சென்றவர்களைப் பற்றி கவலை இல்லை. தமிழக அரசியலில் குருசேத்திரப்போர் தொடங்கி விட்டது. மகாபாரதத்தில், குருசேத்திரப் போர் தொடங்குவதற்கு முன்பு, இரு தரப்பிலும் ஆட்கள் மாறுவார்கள். அதே போல, இப்போது இங்கே இருந்து அங்கே இருந்து ஆட்கள் மாறிக்கொண்டிருக்கிறார்கள். அதனால், குருசேத்திரப் போர் தொடங்கிவிட்டது.
அ.தி.மு.க-வில் இருந்து பலரும் பா.ஜ.க-வுக்கு வருவதாகக் கூறினார்கள். ஆனால், கூட்டணியில் இருப்பதால் நான் மறுத்தேன்.
தேசியக் கட்சியான பா.ஜ.க மாநிலத் தலைவர் என்றால் ஏதோ மேனேஜர் போல நினைத்துக்கொண்டுள்ளார்கள். நான் பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர், நான் ஒரு தலைவர். தலைவருக்கான முடிவுகளை எடுக்கிறேன். பா.ஜ.க-வில் இருந்து நிர்வாகிகளை இழுத்துச் சென்று ள்ளதன் மூலம் பா.ஜ.க வளர்ந்துள்ளது. பா.ஜ.க நிர்வாகிகளை வைத்து வளர வேண்டிய நிலையில் திராவிட கட்சிகள் உள்ளன என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.