பா.ஜ.க-வினருடன் கூட்டணி அமைப்பதற்காக பல்வேறு கட்சியினர் தவம் இருக்கின்றனர் என்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில், அண்ணாமலை இன்று (மார்ச் 7) செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, "பா.ஜ.க-வை தீண்டத்தகாத கட்சி எனக் கூறினார்கள். நோட்டா கட்சி என விமர்சித்தனர். பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்ததால் தான் தோல்வியை தழுவியதாக சில கட்சியினர் கூறினர்.
ஆனால், தற்போது பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று பல கட்சியினர் தவம் இருக்கின்றனர். அப்படி ஒரு சூழலை நாங்கள் உருவாக்கி இருக்கிறோம். இன்றைய தேதியில், பா.ஜ.க இல்லாமல் தமிழ்நாட்டின் அரசியலே இல்லை என்கிற நிலை இருக்கிறது. இதற்காக பா.ஜ.க தொண்டர்கள் இரவு, பகல் பாராமல் உழைக்கின்றனர்.
எந்தக் கட்சியையும், எந்தவொரு தலைவரையும் நான் சிறுமைப்படுத்தி பேசியதில்லை. அந்த நிலையில் பா.ஜ.க இருக்கிறது. அப்படி ஒரு உழைப்பை தொண்டர்கள் கொடுத்து இருக்கிறார்கள். பா.ஜ.க எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கும்?, தேசிய ஜனநாயக கூட்டணியில் யாரெல்லாம் இடம்பெறுவார்கள்?, முதலமைச்சர் வேட்பாளராக யார் இருப்பார்? போன்ற அனைத்து கேள்விகளுக்கும் சரியான நேரத்தில் பதில் அளிப்போம்.
பா.ஜ.க நிலைக்க வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். நாங்கள் யாருக்கும் எதிரி இல்லை. சரியான நேரத்தில் கூட்டணி குறித்து நாங்கள் அறிவிப்போம். இதற்கான அனைத்து முடிவுகளையும் எங்கள் கட்சியின் தேசிய தலைவர்கள் எடுப்பார்கள்.
2000-க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எப் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் மையத்திற்கு ராஜா ஆதித்யா சோழன் என தமிழில் பெயர் சூட்டியிருப்பது மகிழ்ச்சி. மருத்துவம் உட்பட தொழில்நுட்ப படிப்புகளை தமிழ் மொழியில் கற்பிக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா இரண்டாவது முறையாக கோரிக்கை வைத்துள்ளார். ஆனால், தி.மு.க இதனை அமல்படுத்த மறுக்கிறது.
அமித்ஷாவை சிறுமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் வேறு ஒருவருடைய புகைப்படத்தை போஸ்டரில் போட்டு, பா.ஜ.க தொண்டர்களின் பெயரை போட்டுக் கொள்கிறார்கள். அது பா.ஜ.க-வின் போஸ்டர் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
பா.ஜ.க முன்னெடுத்துள்ள கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவு பெருகி வருகிறது. 2026-ஆம் ஆண்டில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்து மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தும். இதில், பள்ளி மாணவர்கள் வரிசையில் நின்று கையெழுத்து போடுகின்றனர்.
மேகதாது அணை விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின், டி.கே. சிவக்குமாருக்கும், சித்தராமையாவிற்கும் கடிதம் எழுதவில்லை. உண்மையாகவே தமிழக மக்களின் முதலமைச்சராக இருந்தால், விவசாய மக்களுக்கான முதலமைச்சராக இருந்தால், மேகதாது அணை கட்டுவதை ஏன் கண்டிக்கவில்லை? ஏன் கர்நாடக முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை? " எனக் கூறினார்.