தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர் 120வது பிறந்த நாள் இன்று (ஜூலை 14) கல்வித் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, காமராஜர் 120-வது பிறந்தநாளையொட்டி, காமராஜர் நினைவிடத்தை சீரமைக்க தமிழக அரசிடம் ரூ.1 கோடி நிதி திரட்டி வழங்குவோம் என்று அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: “கல்வி திருநாள் காமராஜரின் 120-வது பிறந்தநாள் விழா தமிழகத்தில் கல்வி திருநாளாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத, மறைக்கக் கூடாத ஒப்பற்ற தலைவர் காமராஜர் நினைவிடம் கவனிப்பாரற்று கிடக்கிறது.
இந்த நினைவிடத்தை மெரினா கடற்கரையில் உள்ள தலைவர்களின் நினைவிடத்தை போல சீர்படுத்தி ஒளி, ஒலி காட்சிகள் அமைத்து தோட்ட அமைப்புகளையும், வண்ண செடிகளின் அமைப்புகளையும் மேம்படுத்தி, மக்களை கவரும் வண்ணமாக அமைத்திட வேண்டும் என தமிழக முதல்-அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன்.
இதற்காக தமிழக பா.ஜ.க. சார்பில் ரூ.1 கோடி நிதி திரட்டி முதல்-அமைச்சரிடம் கொடுக்கத் தயாராக இருக்கிறோம். அப்படி அவர்களால் நினைவிடத்தை சீரமைக்க இயலாவிட்டால், அதை சீரமைக்கவும், பராமரிக்கவும் தமிழக பா.ஜ.க.வுக்கு தமிழக அரசு அனுமதி தந்தால், மேலும் கூடுதல் நிதி திரட்டி, அவரது நினைவை மக்கள் போற்றும் விதமாகவும், காமராஜர் நினைவிடத்தை மிக முக்கியமான சுற்றுலா தளமாகவும் மாற்றுவோம் என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று அண்ணாமலை அறிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர், காங்கிரஸ் முத்த தலைவர் மறைந்த காமராஜர் நினைவிடத்தை சீரமைக்க பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்திருப்பது கவனம் பெற்றுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"