தமிழகம், புதுவையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களின் பிரதிநிதிகளுடன் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை அண்ணாமலை வியாழக்கிழமை (14.03.2025) சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்; இலங்கையின் வசமிருக்கும் படகுகளை மீட்டுத் தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த சந்திப்பு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “தமிழ்நாட்டின் பல்வேறு கடலோர பகுதி மீனவர்கள், புதுவை- காரைக்கால் மீனவர்கள் ஆகியோரது பிரதிநிதிகளுடன் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து மீனவர்களின் கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தினோம்.” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அண்ணாமலை, “இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவது; சிறை தண்டனை விதிக்கப்படுவது உள்ளிட்டவை குறித்தும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் விளக்கினோம். அனைத்தையும் பொறுமையுடன் கேட்டுக் கொண்ட மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், மீனவர்களுக்கு ஆதரவாக இந்திய அரசு நிற்கும் என உறுதியளித்தார்.” என்று தெரிவித்தார்.
மேலும், “நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பின்னர் இதுவரை ஒரு முறை கூட ஆழ்கடல் பகுதியில் இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை; ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. இந்த விவகாரத்தில் அதிக முன்னுரிமை கொடுத்து நடவடிக்கை எடுப்போம் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் வாக்குறுதி அளித்துள்ளார்” என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.
அண்மையில் காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு, இந்தியாவுக்கான இலங்கை தூதரை மத்திய அரசு நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையின் இந்த கருத்து வந்துள்ளது.