கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, முதல்வர் ஸ்டாலின் கண்ணாடியில் தன்னை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இல்லாத பிரச்சனைகளுக்கு எல்லாம் ஆளுநர் தான் காரணம் என அவரது கடிதம் இருக்கிறது.
தமிழகத்தில் எவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறது. தி.மு.க செய்ய வேண்டிய வேலைகள் எவ்வளவு இருக்கிறது. நிறைய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. இவற்றை விட்டுவிட்டு ஆளுநரை சீண்டிப் பார்க்கின்றனர்.
இதையும் படியுங்கள்: அண்ணாமலை உடன் பிரச்சனை இல்லை; அக்கா, தம்பியாக ஒற்றுமையாக கட்சியை வளர்க்கிறோம் – வானதி சீனிவாசன்
ஆளுநர் அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கியது தவறு என்று சொல்கின்றனர். அந்த விஷயத்தை விவாதிக்க நேரம் இருக்கிறது. அதே வேளையில் எதற்காக முதல்வர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பொழுது ஆளுநரிடம் அமைச்சர்களை நீக்க வேண்டும் என ஏன் வலியுறுத்தினார்?
செந்தில் பாலாஜி ஒரு உத்தமராகவும், மாநிலத்தை காக்க வந்த சேவகாராகும் விதமாக அந்த கடிதம் அனுப்பி இருக்கின்றனர். தன்னுடைய கட்சி செய்யக்கூடிய தவறுகளை மறைக்க ஆளுநர் மீது குற்றசாட்டுகளை கூறுவதை எந்த வகையில் ஏற்றுக்கொள்ள முடியும்?
கள்ளச்சாராய சாவு, பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது என ஏராளமான பிரச்சினைகள் இருக்கும்பொழுது ஆளுநர் மீது அனைத்து பழிகளும் போடப்படுகிறது.
தமிழகத்தில் இருக்கக்கூடிய தி.மு.க எம்.பி, எம்.எல்.ஏ,க்கள் ஆளுநரின் மாண்புக்கு உரிய வகையில் அவரை பேசுவதே இல்லை. இவர்கள் கொடுப்பதை மட்டுமே ஆளுநர் படிக்க வேண்டும் என எந்த சட்டமும் இல்லை. ஆளுநர் அப்படி படிக்க வேண்டும் என்றால் அரசியலமைப்பு சட்டத்தில் சொல்லி இருக்க வேண்டும். எங்கெல்லாம் பொய் இருக்கிறதோ அதையெல்லாம் ஆளுநர் படிக்காமல் இருந்திருக்கின்றார். தி.மு.க சொல்லுவதை எல்லாம் ஆளுநர் சொல்ல முடியாது.
இவர்கள் எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது ஆளுநரிடம் என்ன சொன்னார்கள். வரும் 2024 நாடாளுமன்ற தேர்தல் தோல்வி பயம் காரணமாகவே இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது. பா.ஜ.க 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். முதல்வரின் கடிதத்தில் அவரது இயலாமை தான் வெளிப்படுகிறது.
சிதம்பரம் குழந்தைகள் விவகாரத்தில் ஆளுநர் மீது எப்படி வழக்கு செய்ய முடியும்? தேசிய குழந்தைகள் ஆணையம் விசாரித்து ஒரு அறிக்கை என்று கொடுத்து இருக்கிறது. அவர்கள் சொல்வது தவறா? காவல்துறை சொல்வது தவறா? என்பதுதான் விவாதமே தவிர ஆளுநர் எப்படி இதற்கு பொறுப்பாவார்.
ஆளுநருக்கு ஜி.யு போப் திருக்குறளை மொழி மாற்றம் செய்ததில் மாறுபட்ட கருத்து இருக்கிறது. ஆளுநர் அரசியல் பேசக்கூடாது. ஆனால் ஜி.யு.போப் குறித்து் சொந்த கருத்தை சொல்லி இருக்கின்றார். கலாச்சாரத்தைப் பற்றி, பண்பாட்டை பற்றி ஆளுநருக்கு பேச உரிமை இருக்கிறது.
முதல்வர் எழுதிய கடிதம் முன்னுக்கு பின் முரணாக இருக்கிறது. தோல்வி பயத்தைக் காட்டும் விதமாகவே அவரது கடிதம் இருக்கிறது. தமிழகத்தின் உண்மையான நிலையை பி்திபலிக்கும் விதமாக முதல்வரின் கடிதம் இல்லை. இவ்வாறு பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil