தி.மு.க அரசு மீது உள்துறை அமைச்சரிடம் புகார் அளிக்க உள்ளோம். நடிகை கவுதமிக்கு பா.ஜ.க துணை நிற்கும் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “தி.மு.க அரசு பதவியேற்ற பிறகு அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துகிறது. காவல்துறை அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பா.ஜ.க.,வினரை கைது செய்து வருகின்றனர். தி.மு.க அரசு மீது உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் புகார் அளிக்க உள்ளோம். பா.ஜ.க.,வினர் கைது மற்றும் அவர்கள் மீது தி.மு.க அரசின் நடவடிக்கைகளுக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் நாங்கள் புகார் அளிக்க உள்ளோம்.
தேசிய தலைமைக்கு நாங்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில்தான் 4 பேர் கொண்ட மத்திய குழு தமிழகம் வர உள்ளது. கர்நாடகா முன்னாள் முதல்வரும் தற்போதைய எம்.பி.,யுமான சதானந்தகவுடா, பெங்களூர் தெற்கு தொகுதி எம்.பி பி.சி மோகன், ஆந்திர பா.ஜ.க தலைவர் புரந்தேஸ்வரி, மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனரும் எம்.பி.,யுமான சத்யபால் ஆகியோர் தமிழகம் வர உள்ளனர். 4 பேர் கொண்ட குழுவிடம் நிர்வாகிகள் வருகிற 27 ஆம் தேதி மாலை பா.ஜ.க அலுவலகத்திற்கு வந்து தங்கள் கருத்தை சொல்லலாம். மத்திய குழு, பாதிக்கப்பட்ட பா.ஜ.க நிர்வாகிகள் இல்லத்திற்கு செல்ல உள்ளனர்.
நடிகை கவுதமி என்னிடம் இன்று காலை கூட பேசினார். அவர் கொடுத்த சொத்து அபகரிப்பு புகாரில் காவல்துறை அதிகாரிகள் ஆமை வேகத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரை ஏமாற்றிய நபருக்கும், பா.ஜ.க.,வுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. கவுதமியுடன் பா.ஜ.க துணை நிற்கும். கட்சியில் இருந்து விலகி இருந்தாலும், பா.ஜ.க அவருக்கு தேவையான உதவிகளை செய்யும். அவருக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய நான் தயார்." இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“