தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக தி.மு.க சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் பா.ஜ.க கலந்து கொள்ளாது என அண்ணாமலை தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அப்போது, "தொகுதி மறுசீரமைப்பு மட்டுமல்ல, தேசிய கல்வி கொள்கை வரை ஏராளமான கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன. இவை அனைத்திற்கும் தகுந்த பதிலை நாங்கள் அளித்துள்ளோம். எந்த ஒரு சூழலிலும் தமிழகத்திற்கு அநியாயமான விஷயத்தை மோடி செய்ய மாட்டார்.
அப்படி இருக்கும் போது எதற்காக அனைத்து கட்சி கூட்டம் நடத்த வேண்டும் என கேள்வி எழுப்பினோம். எங்கள் சார்பாக முதலமைச்சருக்கு சில கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக யார் தகவல் கொடுத்தது என முதலமைச்சருக்கு கேள்வி எழுப்பியுள்ளோம்.
தொகுதி மறுசீரமைப்பு குறித்து தி.மு.க-வினர் புரளி கிளப்புகிறார்கள். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்வது காங்கிரஸின் திட்டமாக இருந்தது. இது குறித்து அனைத்து விளக்கமும் அளித்த பின்னர் எதற்காக அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட வேண்டும்?
மக்களின் பிரச்சனைகள் குறித்து பேசுவதற்காக தான் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட வேண்டும். பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம்.
இல்லாத ஒரு விஷயத்திற்காக அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படுகிறது. மார்ச் 5-ஆம் தேதி, மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தி கையெழுத்து இயக்கத்தை பா.ஜ.க தொடங்குகிறது. சென்னையில் நடைபெறும் நிகழ்வில் நான் பங்கேற்கிறேன். அன்றைய தினம் இணையதளம் தொடங்க இருக்கிறோம்.
அதன் வாயிலாகவும் மக்கள் தங்கள் ஆதரவை கொடுக்க முடியும். இதேபோல், களத்திற்கு வந்து படிவத்திலும் கையெழுத்திடலாம். இந்த கையெழுத்து இயக்கம் மே மாதம் இறுதி வரை நடத்த திட்டமிட்டுள்ளோம். ஒரு கோடி கையெழுத்து என்பதை எங்கள் இலக்காக கொண்டிருக்கிறோம். இதனை குடியரசு தலைவரிடம் கொடுக்க வேண்டும் என விரும்புகிறோம்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில், சம்மன் ஒட்டி போலீசார் நடந்து கொண்ட விதம் சரியாக இல்லை. சம்பந்தப்பட்ட நபர் ஆஜராகவில்லை என்றால் தான் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அவர் தெரிவித்தார்.