2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க மற்றும் த.வெ.க. ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கவில்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பிரத்தியேக நேர்காணல் அளித்திருந்தார். அப்போது, பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அதன்படி, 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அண்ணாமலை, "2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க மற்றும் த.வெ.க ஆகிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை" எனத் தெரிவித்தார். மேலும், நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து அண்ணாமலை தனது கருத்துகளை பதிவு செய்திருந்தார்.
அதன்படி, "விஜய்யின் அரசியல் வருகையை வரவேற்கிறேன். அரசியலில் ஏற்ற, இறக்கங்களை விஜய் சந்திப்பார். புதிதாக அரசியலுக்கு வந்துள்ள விஜய், நீண்ட அரசியல் பயணத்தை மேற்கொள்ள வேண்டும்" எனக் குறிப்பிட்டார்.
இதேபோல், 2026-ஆம் ஆண்டில் கூட்டணி ஆட்சி தான் அமையும் என அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். குறிப்பாக, "2026 சட்டமன்ற தேர்தலில் யார் ஆட்சி அமைத்தாலும் கூட்டணி ஆட்சி தான் அமையும்" எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "தமிழகத்தில் இன்று 5 முனைப் போட்டி நிலவுகிறது. தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க, நாம் தமிழர் கட்சி, த.வெ.க என எல்லோரும் எதிரும் புதிருமாக தான் பேசுகிறோம். 5 கட்சிகளுமே வித்தியாசமான 5 விஷயங்களை முன்வைக்கிறோம்" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
"தி.மு.க சரியாக செய்கிறோம் என சொல்கிறார்கள். அ.தி.மு.க சரி செய்கிறோம் எனக் கூறுகிறார்கள். பா.ஜ.க புதிய அரசியலை கொண்டு வருகிறோம் எனக் கூறுகிறோம். விஜய் எந்த அரசியலும் வேண்டாம், புதியதாக ஒன்றை கொண்டு வருகிறேன் என்கிறார். சீமான் தனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் எனக் கேட்கிறார். இவ்வாறு ஐந்தும் 5 குரல்களாக இருக்கும் போது, இன்றைக்கு ஒட்டுவதாக நான் பார்க்கவில்லை" என அண்ணாமலை கூறுகிறார்.
முன்னதாக தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய விஜய், தொடர்ச்சியாக மாநில அரசான தி.மு.க மற்றும் மத்திய அரசான பா.ஜ.க.வை விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது. கட்சியின் முதல் மாநில மாநாட்டில் தொடங்கி, செயற்குழு கூட்டம், சமீபத்தில் நடந்த அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா போன்றவற்றிலும் விஜய் தி.மு.க மற்றும் பா.ஜ.க.வை விமர்சித்திருந்தார். வேங்கைவயல் விவகாரம் மற்றும் மணிப்பூர் கலவரம் ஆகிய நிகழ்வுகளை சுட்டிக்காட்டி விஜய்யின் பேச்சு அமைந்தது.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அ.தி.மு.க உடன் கூட்டணி அமைக்கப் போவதில்லை என அண்ணாமலை திட்டவட்டமாக கூறியுள்ளது தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது. இது குறித்து அரசியல் விமர்சகர்கள் பலரும் தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
நன்றி - புதிய தலைமுறை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“