தஞ்சாவூர் செல்வதற்காக, திருச்சி வந்த, பா.ஜ.க, மாநில தலைவர் அண்ணாமலை, விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது; அ.தி.மு.க., – தி.மு.க., என்று யாரையும் சொல்லவில்லை. மக்கள் வரிப்பணத்தில், யார் ஆட்சியில் இருந்து, ஊழல் செய்திருக்கிறார்களோ, அவர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவது தான் நியாயம். ஊழலுக்கு எதிரான செயல்பாட்டில், செலக்டிவ்வாக இருக்க முடியாது. எந்த ஒரு கட்சிப் பெயரையும், தலைவர் பெயரையும் பயன்படுத்தவில்லை. மக்கள் வரிப்பணத்தில் செயல்படுத்திய திட்டங்களில் நடந்த ஊழலை கூறி உள்ளேன்.
அடுத்து, மத்திய அரசின் திட்டங்களையும் எடுத்துள்ளோம். அதில், யார் இருந்தாலும் கவலைப்பட மாட்டோம். யார் தவறு செய்திருந்தாலும், அதை சொல்லும்போது தான் மக்களுக்கு, பா.ஜ.க, நேர்மையாக ஆட்சி செய்கிறது என்ற நம்பிக்கை வரும்.
இதையும் படியுங்கள்: திருச்சி நிகழ்ச்சியில் கே.என்.நேரு: திடீரென சரிந்து விழுந்த 130 அடி கம்பம்; பரபரப்பு
தமிழக மக்களுக்கு, இது போன்ற அரசியல் செய்ய முடியும், என்பதை எடுத்துக் காட்டுவதற்காகவே, இதை செய்துள்ளோம். ஒரு வாரத்துக்கு பின், சென்னையில், தி.மு.க.,வின் ஊழல் பட்டியல் அனைத்தும் வெளியிடப்படும். ஊழலை தட்டிக் கேட்க வேண்டும் என்று சாதாரண மனிதனுக்கு ஏற்படும் ஆசையை, நாங்கள் நிறைவேற்றுகிறோம். இதில், நண்பர்கள், எதிரிகள் என்று பார்க்க முடியாது. ஊழல் என்பதை ஒட்டு மொத்தமாக பேசினால் மட்டுமே மக்கள் மரியாதை கொடுப்பார்கள்.
தமிழகத்தில், நேர்மையான அரசியல் நடைபெற வேண்டும், என்று பிரதமர் மோடி விரும்புகிறார். எங்களுக்கு யாரும் பங்காளிகள் இல்லை; எல்லோருமே பகையாளிகள் தான். யார் ஊழல் செய்திருந்தாலும், பா.ஜ.க, கட்சி, அவரை பகையாளியாகத்தான் பார்க்கும். ஒரு கோடியே, 31 லட்சம் ரூபாய்க்கு, இன்னும் ஒரு பைசா கணக்கு காணோம். இதுவரை, தி.மு.க.,வில் யாராவது, இந்த சொத்து என்னுடையது இல்லை என்று சொல்கிறார்களா? சுமார் 150 நிறுவனங்களை குறிப்பிட்டுள்ளேன்.
இந்த நிறுவன உரிமையாளர், பங்குதாரர் இல்லை, என்று இதுவரை யாரும் சொல்லவில்லை. சொத்து வரியை வைத்து, கூறுவதாகத் தான் சொல்கின்றனர். துாபாய் சென்ற முதல்வர் மற்றும் உதயநிதி பற்றிய நேரடி குற்றச்சாட்டுக்கு, இல்லை என்று யாரும் பதில் சொல்லவில்லை. அவர்கள் மீது, நேரடியாக நானே சென்று, சி.பி.ஐ.,யில் புகார் கொடுக்கப் போகிறேன். மக்கள் மன்றத்தில் வைக்கப்படும் ஊழல் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்ல வேண்டும். நாங்கள் கேட்கும், ‘டெக்னிக்கல் ஆடிட்டட்’ பதிலை தான் தர வேண்டும்.
கட்சியும், நண்பர்களும் கொடுத்துத் தான், நான் செலவு செய்கிறேன். உங்களை போல், கொள்ளையடித்து சொத்து சேர்த்த வைத்திருந்தால், அந்தப் பணத்தில் இருந்து கொடுப்பேன். கொள்ளையடித்து சொத்து சேர்க்க வில்லை. ஒரு நிறுவனத்தில் ஆலோசகராக வேலை செய்வதால், எனக்கு, ஒரு லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் வருமானம் வருகிறது. விவசாயம் போன்றவை செய்து, வருமானம் ஈட்ட முடிகிறது. என்னுடைய வங்கி வரவு– செலவு விபரங்களை, 12 ஆண்டுகளாக, ‘ஓபனாக’ போட்ட பின், இதில் ஒளிவு மறைவு எதுவும் இல்லை.
ஊழலை பற்றி பேசும் போது, எனக்கு லாயக்கு இருக்கு என்று மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக, எல்லாவற்றையும் வெளிபடையாக்கி இருக்கிறேன். வரும் 2024ல் நடைபெறும் லோக்சபா தேர்தல், ஊழலை மையமாக வைத்தே நடைபெறும். இதில் இருந்து பின்வாங்கப் போவதில்லை. அடுத்த எட்டு மாதம், ரணகளமாகத் தான் இருக்கும். தேர்தலுக்கு முன் பட்டும் படாமல் அரசியல் செய்ய வரவில்லை. இப்போது மாறாவிட்டால், தமிழகம் எப்போதும் மாறாது, என்பதற்காக இதை செய்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.
மேலும், ரபேல் வாட்ச்சின் வரிசை எண் 149 என்று சொல்லி விட்டு, தற்போது, 147 என்று சொல்லியது பற்றி, செய்தியாளர்கள் கேட்டனர். உடனே, வாட்சை கழற்றி, அழுக்கை துடைத்து, அருகில் இருந்தவரிடம் கொடுத்து வரிசை எண்ணை படிக்கச் சொன்னார். அவர், 147 என்று சொன்னார். இந்த வாட்சின் நம்பர் 147 தான். மேடையில் எடுத்து படிக்கும் போது, அழுக்கு இருப்பதால், படிக்க கஷ்டமாக இருந்தது. எனக்கு, யார் வாட்ச் கொடுத்தனர் என்றும், கோயம்புத்துாரில் எந்த கம்பெனி என்பதையும் சொல்லி விட்டேன், என்று விளக்கம் அளித்தார்.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.