Advertisment

சென்னையில் பா.ஜ.க கொடி கம்பம் அகற்றப்பட்ட விவகாரம்; தமிழகம் முழுவதும் 10000 கொடி கம்பங்கள் நடப்படும் – அண்ணாமலை

எங்கள் தொண்டர்கள் சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும்; நவம்பர் 1ஆம் தேதி தொடங்கி 100 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் தமிழகம் முழுவதும் 100 பா.ஜ.க கொடிக்கம்பங்கள் நடப்படும் – தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை

author-image
WebDesk
New Update
Cauvery row TN BJP chief K Annamalai announce Protest Tamil

எங்கள் தொண்டர்கள் சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் – தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை

பா.ஜ.க.,வின் ஒரு கொடி கம்பத்தை அகற்றிவிட்டதால் வெற்றி பெற்றதாக நினைக்க வேண்டாம். நவம்பர் 1ஆம் தேதி தொடங்கி தமிழகம் முழுவதும் 100 பா.ஜ.க கொடிக்கம்பங்கள் நடத்தப்படும் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisment

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் வீடு உள்ளது. இவரது வீட்டிற்கு அருகே, சுமார் 50 அடி உயரமுள்ள கொடி கம்பத்தில் பா.ஜ.க கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக, பா.ஜ.க.,வினர் 50 அடி உயர பா.ஜ.க கொடிக்கம்பத்தை, அண்ணாமலையின் வீட்டிற்கு அருகே நிறுவினர்.

ஆனால், மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறையில் அனுமதி வாங்காமல் இந்த கொடிக்கம்பத்தை நட்டு வைத்ததாக சொல்லப்படுகிறது. இதற்கு அந்த பகுதியிலுள்ள இஸ்லாமிய அமைப்புகளும், பொதுமக்கள் சிலரும் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்த தகவல் கிடைத்ததும் பா.ஜ.க.,வினரும் அங்கு கூடிவிட்டனர். இதனால், பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

இதனிடையே, அனுமதியின்றி வைக்கப்பட்டிருக்கும் கொடிகம்பத்தை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்களும், இஸ்லாமியர்களும் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார், இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தினர். நெடுஞ்சாலைத்துறையிடம் அனுமதி வாங்காமல் கொடிக்கம்பத்தை வைத்திருந்ததால், அதை அகற்ற வேண்டும் என இஸ்லாமியர்கள் வலியுறுத்தினர்.

இதனால், கொடிக்கம்பத்தை அகற்றுவதற்காக போலீசார் ஜே.பி.சி வாகனத்தை வரவழைத்தனர். இதனையடுத்து ஆவேசமான பா.ஜ.க.,வினர் ஜே.சி.பி கண்ணாடியை அடித்து நொறுக்கினார்கள். இதனால் போலீசாருக்கும் பா.ஜ.க.,வினருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்படும் சூழல் உருவானது. இதில் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே, கொடிகம்பம் அகற்றப்பட்டதற்கு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், “குண்டு வைத்து மக்கள் பலரைக் கொன்ற தீவிரவாதிகளை எல்லாம், அரசியலுக்காக விடுதலை செய்யத் துடிக்கும் தி.மு.க, தீவிரவாதிகள் காரில் வெடிகுண்டுகளோடு சுதந்திரமாகச் சுற்றித் திரியும் அளவுக்கு உளவுத்துறையில் கோட்டை விட்ட தி.மு.க, பனையூரில் கிளை தலைவர் ஏற்பாட்டில் நடப்பட்டிருந்த கொடிக்கம்பத்தை அகற்ற, தீவிரவாதிகளைக் கைது செய்யப் போவது போல நள்ளிரவில் பெரும் போலீஸ் படையுடன் புறப்பட்டு வந்தது பெரும் வினோதம்.

தி.மு.க அரசின் உத்தரவின் பேரில், நள்ளிரவில் கொடிக்கம்பத்தை அகற்ற வந்த காவல்துறையினரை எதிர்த்துப் போராடிய பா.ஜ.க சகோதர சகோதரிகள் மீது, காட்டுமிராண்டித் தனமான தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். பொதுமக்களை ஏய்த்து பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கும் தி.மு.க, எங்கள் தொண்டர்கள் சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

அதிகாரத் திமிரில் அராஜகம் செய்து கொண்டிருக்கும் தி.மு.க, தமிழக பா.ஜ.க.,வின் ஒரு கொடிக்கம்பத்தை அகற்றிவிட்டதால் வெற்றி பெற்றதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். நவம்பர் 1ஆம் தேதி தொடங்கி 100 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் தமிழகம் முழுவதும் 100 பா.ஜ.க கொடிக்கம்பங்கள் நடப்படும். பத்தாயிரமாவது கொடி கம்பம் அடுத்த வருடம் பிப்ரவரி 8ஆம் தேதி (100வது நாள்) நேற்று காவல்துறையினரின் தடியடியில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சகோதரர் விவின் பாஸ்கரன் முன்னிலையில் கொடி கம்பம் அகற்றப்பட்ட அதே பனையூரில் நடப்படும் என்பதையும் ஊழல் தி.மு.க அரசுக்கு மிக பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.” இவ்வாறு அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Bjp Annamalai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment