வழக்கு தொடுக்கிறேன் என பூச்சாண்டி காட்டும் வேலை எல்லாம் என்னிடம் வேண்டாம், தி.மு.க.,வினரின் ஊழல் பட்டியல் தொடர்பாக சி.பி.ஐ.,யில் வழக்குப்பதிவு செய்ய உள்ளேன் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தி.மு.க.,வினரின் சொத்து விவரங்கள் என்று பட்டியல் ஒன்றை தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்டார். தி.மு.க அமைச்சர்கள், எம்.பி.,க்கள் என பலரது சொத்து விவரங்கள் எனக் குறிப்பிட்டு 1.34 லட்சம் கோடி மதிப்பில் சொத்துக்கள் இருப்பதாக DMK Files முதல் பாகம் என்று ஒரு வீடியோ வெளியிட்டார்.
இதையும் படியுங்கள்: முதல்வர் அனுமதி பெற்று அண்ணாமலை மீது வழக்கு: செந்தில் பாலாஜி அறிவிப்பு
இந்தநிலையில், தி.மு.க அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தியாளர்களிடம், ”அண்ணாமலை எந்த ஒரு ஊழல் குற்றச்சாட்டையும் ஆதாரத்துடன் தெரிவிக்கவில்லை. அண்ணாமலை யார் மீது குற்றம் சாட்டியுள்ளாரோ, அவர்கள் அண்ணாமலை மீது வழக்கு தொடருவார்கள்,” என்று கூறினார்.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “தி.மு.க ஃபைல்ஸ் சொத்துப் பட்டியல் வெளியிடப்பட்டு 24 மணி நேரம் முடிந்த நிலையில், அடிப்படையாக இதுவரை யாரும் ஒரு குற்றச்சாட்டிற்குக் கூட மறுப்பு தெரிவிக்கவில்லை. இன்னும் பல ஆதாரங்களுடன் வெளியிட தயாராக இருக்கிறோம். ஊழல் செய்த எவராலும் தப்ப முடியாது. வழக்கு தொடுக்கிறேன் என தி.மு.க.,வினர் என்னிடம் பூச்சாண்டி வேலை எல்லாம் காட்ட வேண்டாம். அடுத்த வார இறுதிக்குள் டெல்லி சென்று தி.மு.க.,வினரின் ஊழல் பட்டியல் தொடர்பாக சி.பி.ஐ.,யில் வழக்குப்பதிவு செய்ய உள்ளேன். இதை அப்படியே விடப்போவது இல்லை. என்னுடைய போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
அண்ணாமலை கோர்ட் கோர்ட்டாக சுற்றுப்பயணம் செல்வார் என ஆர்.எஸ்.பாரதி, சொன்னதாகக் கேள்விப்பட்டேன். அப்படி சென்றும் கூட கட்சியை வளர்க்கலாம். நீதிமன்றத்தில் இன்னும் கூடுதல் ஆதாரங்களை கொடுப்போம். நீங்கள் கோர்ட்டில் வந்து இல்லை என்று சொல்லுங்கள். அதனால் யாரும் எங்கும் தப்பிச் செல்ல முடியாது. இந்த பூச்சாண்டி வேலை எல்லாம் என்கிட்ட ஆகாது. ஆர்.எஸ்.பாரதி என்ன, அவர் தந்தையாரே வந்தாலும் சந்திக்கத் தயார்,” எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”தி.மு.க ஃபைல்ஸ் – கேள்வி எண் 1: தி.மு.க தலைவர் மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலினின் மகனும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நோபல் நிறுவனத்தில் 2009ஆம் ஆண்டு இயக்குநராக இருந்திருக்கிறார்.
தி.மு.க அமைச்சர் அன்பில் மகேஷ் நோபல் நிறுவனத்தில் 2016 ஆம் ஆண்டு இயக்குநராக இருந்திருக்கிறார். துபாய் சென்ற தமிழக முதல்வர் ஸ்டாலின், நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனத்திடம் 1000 கோடி ரூபாய் தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளார்.
தி.மு.க.,வினர் தொடர்புள்ள குழுமமான நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனம், தமிழகத்தில் முதலீடு செய்வதாக அறிவித்திருக்கும் நிதி, யாருடையது என்று தமிழக மக்களின் சார்பாக நான் கேள்வி எழுப்புகிறேன். பதில் அளிப்பீர்களா திரு ஸ்டாலின்,” எனப் பதிவிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil