கே.என் நேரு இலாகா ஊழியர் நியமனத்தில் ரூ 888 கோடி ஊழல்; சி.பி.ஐ விசாரணை தேவை: அண்ணாமலை

அமைச்சர் கே.என். நேருவின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணியிட நியமனங்களில் லஞ்சம் பெற்றதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை தேவை என்று பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தினார்.

அமைச்சர் கே.என். நேருவின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணியிட நியமனங்களில் லஞ்சம் பெற்றதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை தேவை என்று பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தினார்.

author-image
WebDesk
New Update
Annamalai KN Nehru 2

அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என கடினமாக உழைத்த பல இளைஞர்களின் கனவுகளை தமிழக அரசு நசுக்கிவிட்டதாகவும் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.

அமைச்சர் கே.என். நேருவின்  நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணியிட நியமனங்களில் லஞ்சம் பெற்றதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை தேவை என்று பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை புதன்கிழமை வலியுறுத்தினார்.

Advertisment

மேலும், அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என கடினமாக உழைத்த பல இளைஞர்களின் கனவுகளை தமிழக அரசு நசுக்கிவிட்டதாகவும் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடைபெற்ற பணி நியமனங்களுக்கு லஞ்சம் பெற்றுக் கொண்டு நியமனம் செய்திருப்பதாக அமலாக்கத்துறை தமிழக காவல்துறைக்கு கடிதம் எழுதி உள்ளது. 

அமலாக்கத்துறை தமிழ்நாடு காவல்துறைக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் உதவிப் பொறியாளர், இளநிலைப் பொறியாளர், துப்புரவு ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளில் 2538 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றுள்ளது.

Advertisment
Advertisements

இதில், ஒவ்வொரு பதவிக்கும் ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை லஞ்சம் வரை பணம் வசூலிக்கப்பட்டதாகவும், அதற்காக சில செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்களும் அவர்களது நெருங்கிய தொடர்புடையவர்களும் தேர்வு செயல்முறையை முறைகேடாக மாற்றி, 2025 ஆகஸ்டில் குறைந்தது 150 தேர்வர்ளுக்கு நியமன ஆணைகள் வழங்கப்பட்டதாகவும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. 

மேலும், 2024-ம் ஆண்டின் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட 2,538 பணியிடங்களுக்கான உதவி பொறியாளர்கள், நகர திட்டமிடல் அதிகாரிகள், இளநிலை பொறியாளர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதோடு, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரன் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் இந்த முறைகேடு தெரியவந்ததாகவும் அமலாக்கத்துறை தமிழக காவல்துறைக்கு அனுப்பிய கடித்தத்தில் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணியிட நியமனங்களில் லஞ்சம் பெற்றதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை தேவை என்று பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை புதன்கிழமை வலியுறுத்தியுள்ளார்.

அமலாக்கத்துறை கடிதம் தொடர்பாக வெளியான செய்தியைச் சுட்டிக்காட்டி பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணமாலை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

“முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு அடுத்தடுத்து நடக்கும் ஊழல்களின் மறுபெயராகவே மாறிவிட்டது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் (எம்.ஏ.டபிள்யூ.எஸ்) உள்ள 2,538 பணியிடங்களில் பணியாளர்களை நியமிக்கப் ஒரு பணி இடத்துக்கு ரூ.35 லட்சம் வீதம் லஞ்சம் வாங்கப்பட்டதன் மூலம், ரூ.888 கோடி ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை (இ.டி) தற்போது சுட்டிக்காட்டியுள்ளது.

2024-ன் தொடக்கத்தில் 2,538 பணியிடங்களுக்கு விண்ணப்பித்த 1.12 லட்சம் தேர்வர்களில், கடினமாகப் படித்துத் தீவிரமாகத் தயாரான ஆயிரக்கணக்கான தகுதியான இளைஞர்கள் ரூ.35 லட்சம் லஞ்சம் கொடுக்க முடியாததால் வாய்ப்பு மறுக்கப்பட்டனர். தி.மு.க அரசின் தீராத பேராசை, இந்த இளைஞர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் தகர்த்துவிட்டது.

ரூ.888 கோடி ஊழல் குறித்த இந்தச் சமீபத்திய வெளிப்பாடு, ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல; மாறாக, மு.க. ஸ்டாலினின் ஆட்சியின் அடையாளமாக மாறிவிட்ட முறையான ஊழலின் கவலையளிக்கும் வடிவத்தின் ஒரு பகுதியாகும்.

இதிலுள்ள வேதனையான முரண்பாடு என்னவென்றால், 2025 ஆகஸ்ட் 6-ம் தேதி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இந்தப் பணி நியமன ஆணைகளை அந்தத் தேர்வர்களிடம் வழங்கியுள்ளார். அவர் "வேலை உருவாக்கத்தை" கொண்டாடும் வகையில் புகைப்படங்களுக்குப் போஸ் கொடுத்தாலும், உண்மையில் இந்தப் பதவிகள் ஹவாலா நெட்வொர்க் உட்பட ஒரு விரிவான ஊழல் சங்கிலி மூலம் விற்கப்பட்டுள்ளன.

நகராட்சி நிர்வாகத் துறையில் "ஆழமாக வேரூன்றிய" மற்றும் "முறையான ஊழல் நெட்வொர்க்கை" அமலாக்கத்துறை சுட்டிக்காட்டியுள்ளது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் என். ரவிச்சந்திரன் மற்றும் அவரது ட்ரூ வேல்யூ ஹோம்ஸ் (டி.வி.எச்) குழுமம் ஆகியவை சம்பந்தப்பட்ட ஒரு வங்கிக் கடன் மோசடி வழக்கில் அமலாக்கத்துறை நடத்திய விசாரணையின் போது இது வெளிவந்துள்ளது.

தி.மு.க அரசின் கீழ் வெளிவரும் முக்கிய ஊழல்களும் முறையான ஊழல்களும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் அவரது நிர்வாகத்தின் மீது உடனடி பொறுப்புணர்வை கோருகின்றன.

நீதித்துறையின் மேற்பார்வையில் நடத்தப்படும் விரிவான சி.பி.ஐ விசாரணை மட்டுமே, அரசுப் பணிகளை லஞ்சம் கொடுத்து வாங்கியவர்கள் மற்றும் பொது வளங்களைக் கொள்ளையடித்தவர்கள் பதிலளிக்க கடமைப்பட்டவர்கள் என்பதை உறுதி செய்யும். மேலும், தமிழக மக்களுக்கு நீதி வழங்கப்படும்.” என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

அண்ணாமலையின் இந்தக் குற்றச்சாட்கள் குறித்து தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு,  “நகராட்சி நிர்வாகத் துறை உதவி செயற்பொறியாளர் நியமனத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. அரசுக்கு களங்கம் கற்பிக்கும் முயற்சி எக்காலத்திலும் வெற்றி பெறாது.” என்று தெரிவித்துள்ளார். 

மேலும், “அரசியல் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் இதுபோன்ற நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கது. களங்கம் கற்பிக்கும் முயற்சிகளை முறியடிக்க அனைத்து சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்” என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "திராவிட மாடல் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டுமென்ற அரசியல் உள்நோக்கத்தோடு, பல ஆண்டு காலத்திற்கு முந்தைய வங்கி வழக்கு ஒன்றினை தூசு தட்டி எடுத்து, அதனை ஊதிப் பெரிதாக்கும் முயற்சியில் தோற்றுப் போன ஒன்றிய அரசின் அமலாக்கத் துறை மேற்கொண்டுள்ள மேலும் ஒரு முயற்சி தான், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் பணி நியமனம் குறித்த நேற்றைய கடிதம்.

2011-ம் ஆண்டிலிருந்து 2021-ம் ஆண்டு வரையுள்ள பத்தாண்டு அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் போதிய நியமனங்கள் செய்யப்படாமல், காலிப் பணியிடங்கள் அதிகமாகி நிர்வாகத்தை மேற்கொள்வதில் மிகுந்த சிரமங்கள் இருந்த நிலையில், 2019 பணியிடங்களை நேரடி நியமனம் மூலமாக நிரப்ப வேண்டும் என்பதற்காக, அண்ணா பல்கலைக்கழகம் மூலமாக கடந்த 2.2.2024 அன்று அறிவிக்கை வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பிற பணியிடங்களையும் சேர்த்து, 2,569 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டன.

2011-ம் ஆண்டிலிருந்து 2021-ம் ஆண்டு வரையுள்ள பத்தாண்டு அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் போதிய நியமனங்கள் செய்யப்படாமல், காலிப் பணியிடங்கள் அதிகமாகி நிர்வாகத்தை மேற்கொள்வதில் மிகுந்த சிரமங்கள் இருந்த நிலையில், 2019 பணியிடங்களை நேரடி நியமனம் மூலமாக நிரப்ப வேண்டும் என்பதற்காக, அண்ணா பல்கலைக்கழகம் மூலமாக கடந்த 2.2.2024 அறிவிக்கை வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பிற பணியிடங்களையும் சேர்த்து, 2,569 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டன.

இப்பணியிடங்களை வெளிப்படையான, ஒளிவுமறைவற்ற முறையில் நிரப்புவதற்காக, தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்களைப் பெறுவதற்கென தனியாக ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டு, அந்த இணையதளம் மூலமாக, இரண்டு இலட்சத்து 499 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலனை செய்யப்பட்டு, விண்ணப்பதாரர்களுக்கு இணையவழியில் நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டு, அண்ணா பல்கலைக்கழகம் மூலமாக, 38 மாவட்டங்களில் உள்ள 591 மையங்களில் தேர்வுகள் நடத்தப்பட்டன.

இந்த எழுத்துத் தேர்வுகள் அனைத்தும், அண்ணா பல்கலைக்கழகம் மூலமாக மதிப்பீடு செய்யப்பட்டு, எழுத்துத் தேர்வு முடிவுகளும் இணைய தளத்தில் 20.9.2024 அன்று வெளியிடப்பட்டன. நியாயமான முறையில் தேர்வுகள் நடத்தப்பட்டு, முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதால், இந்தத் தேர்வில் கலந்து கொண்ட இலட்சக்கணக்கான விண்ணப்பதாரர்களிடமிருந்து ஒரு ஆட்சேபணை கூட பெறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, பல்வேறு பணியிடங்களுக்கு, பணித் தகுதியின் அடிப்படையில், அதிகாரிகளைக் கொண்ட தேர்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டன. பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு பதவிகளுக்கு 13 தேர்வுக் குழுவினால் 7 ஆயிரத்து 272 தேர்வர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பும் நேர்முகத் தேர்வுகளும் நடத்தப்பட்டன.

இந்த சான்றிதழ் சரிபார்ப்பும், நேர்முகத் தேர்வுகளும் முடிவுற்ற பின்னர், இறுதித் தேர்வு முடிவுகள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டு, மதிப்பெண் மற்றும் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையிலும், கலந்தாய்வு முறையிலும், இறுதியாக 2,538 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த நேரடி நியமனம் தொடர்பாக பல்வேறு வழக்குகளும், தடையாணைகளும் நிலுவையில் இருந்த நிலையில், கடந்த 4.7.2025 அன்று, அனைத்து தடைகளும் மாண்பமை உச்சநீதிமன்றத்தால் இரத்து செய்யப்பட்ட நிலையில், இறுதித் தேர்வுப் பட்டியலும் வெளியிடப்பட்டது.

அண்ணா பல்கலைக்கழகம் மூலமாகத் தான் தேர்வுகள் நடந்தன. இவ்வாறு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணியாணைகள் முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படடன. இத்தகைய ஒரு வரலாற்றுச் சாதனை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையால் நிகழ்த்தப்பட்டதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், இதற்குக் களங்கம் கற்பிக்கும் வகையில், அமலாக்கத் துறை மூலமாக ஒன்றிய அரசு இத்தகைய அரசியல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இத்தேர்வுகளை முன்னின்று மிகச் சிறப்பாக நடத்திய அண்ணா பல்கலைக்கழகமானது, உலகில் தலைசிறந்த சுயாட்சி பல்கலைக்கழகங்களுள் ஒன்று என்பதையும், இப்பல்கலைக்கழகம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ, நகராட்சி நிர்வாகத் துறையின் எந்தவிதக் கட்டுப்பாட்டிற்கும் உட்பட்டது அல்ல என்பதையும் அனைவரும் அறிவார்கள்.

முந்தைய ஆட்சிக் காலத்திலும், அதாவது கடந்த 2012, 2013, 2014, 2015 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் பல்வேறு பதவிகளுக்கு இதே அண்ணா பல்கலைக்கழகம் மூலமாகத் தான் தேர்வுகள் நடத்தப்பட்டு, பணியிடங்கள் நிரப்பப்பட்டன என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன். இந்நிலையில், கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வுகளில் மட்டும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அலுவலர்கள் தலையிட்டதால் தவறுகள் நிகழ்ந்துள்ளன என்ற கூற்று நகைப்புக்குரியது.

இரண்டு இலட்சம் தேர்வர்கள் விண்ணப்பித்து, ஒரு இலட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதி, ஒளிவுமறைவற்ற முறையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, இறுதியாக 2,538 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு, சிறப்பாகப் பணிபுரிந்து வரும் நிலையில், இவ்வாறு களங்கம் கற்பிக்கும் முயற்சி எக்காலத்திலும் வெற்றி பெறாது. அரசியல் நோக்கத்தோடு மேற்கொள்ளப்படும் இதுபோன்ற நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிப்பதோடு, அவற்றை முறியடிக்கத் தேவையான அனைத்து சட்டபூர்வ நடவடிக்கைகளையும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மேற்கொள்ளும் என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அமைச்சர் கே. என். நேரு தெரிவித்துள்ளார்.

Annamalai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: