டாஸ்மாக் முறைகேடு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும். டாஸ்மாக் முறைகேடுகளை மறைக்கவே தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உட்பட 7 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள் மற்றும் பெருமளவு ரொக்கம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக சொல்லப்பட்டது. அதேபோல், தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மதுபான ஆலை தயாரிப்பு நிறுவனம் உட்பட மொத்தம் 25 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த அமலாக்கத்துறை சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது டாஸ்மாக் நிறுவனத்தில், ரூ1000 கோடிக்கு மேலாக முறைகேடுகள் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியதாவது;
“டாஸ்மாக்கில் மாபெரும் ஊழல் நடந்துள்ளது. ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்துள்ளது. டெல்லியில் நடைபெற்றதை விட பெரிய மோசடி நடந்திருப்பதாக தெரிகிறது. டாஸ்மாக் முறைகேடு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும். டாஸ்மாக் முறைகேடு விவகாரம் வரும் நாட்களில் பூதாகரமாக வெடிக்கும். முறைகேட்டில் ஈடுபட்டு உள்ளவர்கள் குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும். இப்போது தான் அந்த அமைச்சர் ஜெயிலுக்கு போயிட்டு வந்தார், வந்தபிறகு மீண்டும் இதுபோன்று முறைகேடு நடந்துள்ளது. டாஸ்மாக் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளவர்கள் குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும். டாஸ்மாக் முறைகேடுகளை மறைக்கவே தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர். டாஸ்மாக் முறைகேடுகள் குறித்து மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும். போராட்டம் குறித்த அறிவிப்பு அடுத்த 2-3 நாட்களில் வெளியாகும்.
அமலாக்கத்துறை நடவடிக்கை அரசியல் பழிவாங்கல் இல்லை. லஞ்ச ஒழிப்புத்துறை, காவல்துறை போன்ற பதிவு செய்த 47 எஃப்.ஐ.ஆர்.,களின் அடிப்படையிலே அமலாக்கத்துறை இந்த வழக்கை கையில் எடுத்துள்ளது” இவ்வாறு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறினார்.