/indian-express-tamil/media/media_files/VyTpQ71H4l9iv8e1sFCQ.jpg)
புண்பட்ட முருக பக்தர்கள் மனதிற்கு ஆறுதலுக்காகவாவது முருக பக்தர்கள் அனைவரிடமும், முருக கடவுளிடமும் அண்ணாமலை மன்னிப்புக் கேட்க வேண்டும்; கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை வலியுறுத்தல்
தனது தவறை உணர்ந்து முருக பக்தர்களிடம் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையின் மாநிலச் செயலாளர் சூர்யமூர்த்தி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது; “தமிழ் கடவுளான முருகனை வேல் ஆகவும், மயில் ஆகவும், காவடியாகவும், சேவல் கொடியாகவும் பல்வேறு வடிவங்களில் நாம் வழிபட்டு வருகிறோம். அதில் காவடியில் பால் காவடி, பன்னீர் காவடி, இளநீர் காவடி, சந்தன காவடி, சர்ப்ப காவடி மற்றும் பல காவடிகள் பக்தியுடன் பக்தர்கள் காவடி எடுத்து இறைவனை வழிபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், தமிழக பா.ஜ.க தலைவர் சகோதரர் அண்ணாமலை அவர்கள் காலில் காலணி அணிந்து காவடி ஆட்டம் ஆடுவது போன்ற போட்டோ வலைதளத்தில் பரவி வருகிறது. நாம் வணங்கும் தெய்வத்தின் அடையாளத்திற்கு உரிய மதிப்பு கொடுக்காமல் போகிற போக்கில் பொருள் வைத்து ஆடுவது போல ஆடுவது இந்து மக்களின் தமிழ் கடவுளான முருகனை அவமானப்படுத்தியது ஆகும்.
தமிழகம் மற்றும் அண்டை மாநிலத்தில் இருந்து கூட காலில் செருப்பு அணியாமல் சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் முருகன் கோவிலுக்கு கூட முருக பக்தர்கள் பல நாட்கள் விரதம் இருந்து காவடி எடுத்து வருகின்றனர். அவ்வாறு காவடி எடுத்து வரும் பக்தர்கள் தங்களை துன்புறுத்திக் கொண்டு பல கிலோமீட்டர் தூரம் வெறும் காலிலேயே நடந்து முருகனை வழிபடுகின்ற ஆன்மீக பூமி இது.
ஆன்மீக ஆதரவாளர் போல் பேசுகின்ற அண்ணாமலை முருகக் கடவுளை அவமானப்படுத்துவது போலவும் லட்சக்கணக்கான முருக பக்தர்களின் மனதைப் புண்படுத்துவது போலவும் நடந்து கொள்வது வேதனைக்கு உரியது. விரும்பத் தகாதது.
காலணி அணிந்துதான் காவடி எடுக்க வேண்டும் என்றால் நீங்கள் காவடியைத் தொடாமல் இருக்க வேண்டும். சுற்றி இருக்கின்ற மக்களும் கண்டு கொள்ளாமல் ஆடிக்கொண்டு இருப்பது வேடிக்கையாக உள்ளது. உங்களுடைய செயல் மன்னிக்க முடியாத செயல் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். புண்பட்ட முருக பக்தர்கள் மனதிற்கு ஆறுதலுக்காகவாவது முருக பக்தர்கள் அனைவரிடமும், முருக கடவுளிடமும் செய்த தவறுக்கு மன்னிப்பு கேளுங்கள். இவ்வாறு அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.