முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்வில் கலந்து கொண்ட மாணவிகள், தாங்கள் அணிந்து வந்த கருப்பு நிற துப்பட்டாவை அகற்றுமாறு வலியுறுத்தப்பட்டதற்கு, பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சிந்துவெளி பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் மூன்று நாட்கள் நடைபெறும் பன்னாட்டு கருத்தரங்கை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த கருத்தரங்கில் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னர் மாணவிகள் அணிந்து வந்த கருப்பு நிற துப்பட்டாவை நுழைவாயிலில் இருந்தவர்கள் வாங்கி வைத்துக் கொண்டனர். இதேபோல், கருப்பு நிறத்திலான குடை, கைப்பைகள் உள்ளிட்டவற்றையும் விழா அரங்கிற்கு வெளியே வைத்து விட்டனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்விலேயே மாணவிகள் அணிந்து வந்த கருப்பு நிற துப்பட்டாக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையையும், பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
இச்சம்பவத்திற்கு பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளபக்கத்தில், "முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்ட நிகழ்வில் பங்கேற்க வருகை தந்த மாணவிகள், தங்கள் கருப்பு நிற துப்பட்டாவை அகற்றிவிட்டு விழா அரங்கத்திற்குள் வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
பயம் ஏற்பட்ட காரணத்தினால் தாங்கள் என்ன செய்கிறோம் என தெரியாமல், நம்பிக்கையற்றவர்களாக மாறியுள்ளனர். இது என்ன மாதிரியான சர்வாதிகாரம்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.