இந்தியாவில் காங்கிரஸ் கட்சியால் தான் ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை தள்ளிப்போனது என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்த பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். அப்போது, "1952-ல் முதல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அப்போது மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 494 பேர் இருந்தனர். அதன் பின்னர், 1961-ல் 522 உறுப்பினர்கள் இருந்தனர். 1971-ல் நடந்த தேர்தலில் 543 பேர் இருந்தனர். தற்போது வரை அதே எண்ணிக்கையில் தான் இருக்கிறது.
2001-ஆம் ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த போவதில்லை என நிர்ணயிக்கப்பட்டது. 2001-ஆம் ஆண்டில் வாஜ்பாயும் இதே எண்ணிக்கை தான் தொடரும் எனக் கூறினார். இது 2026-ஆம் ஆண்டுடன் நிறைவு பெறுகிறது.
தற்போதைய நாடாளுமன்றத்தின் நாள்கள் 5 ஆண்டுகள். அது 2029-ல் முடிவுக்கு வரும். அதன் தொடர்ச்சியாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும். 2029-ஆம் ஆண்டுக்கு பிறகு நடக்கக் கூடிய நாடாளுமன்ற தேர்தலின் காலம் எவ்வளவு ஆண்டுகள் இருக்குமோ, அது தான் சட்டமன்றத்தின் காலம் எனக் கூறப்பட்டுள்ளது.
இதை பல அரசியல் கட்சி தலைவர்கள் தவறாக புரிந்து கொண்டு பேசுகிறார்கள். 1951 - 52 ஆண்டில் ஒரே நாடு, ஒரே தேர்தல் தான் கடைபிடிக்கப்பட்டது. இதேபோல், 1957, 1962, 1967 ஆகிய ஆண்டுகளிலும் ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையில் தான் நடைபெற்றது. ஆனால், 1967-க்கு பிறகு தான் ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை குழப்பத்தில் சென்றது. அன்று இருந்த காங்கிரஸ் கட்சி 1968-ல் ஆட்சி கலைப்பில் ஈடுபட்டது. 1969-லும் ஆட்சி கலைப்பில் காங்கிரஸ் ஈடுபட்டது. ஆட்சிகளை கலைத்த பின்னர் தேர்தலின் தேதியும், காலமும் மாறியது. இதனால் தான் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது தள்ளிப்போனது" என அவர் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“