நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் நடத்தி வரும் சி.பி.எஸ்.இ பள்ளியில் இந்தி மொழி கற்பிக்கப்படும் நிலையில், அவர் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக பேசுவதாக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னதாக, மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டமான சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு ரூ. 2,152 கோடி கல்வி நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை. இந்நிலையில், புதிய கல்விக் கொள்கையை ஏற்காவிட்டால் தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி கிடையாது என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருந்தார்.
அதன்படி, உத்தர பிரதேச மாநிலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "மும்மொழிக் கொள்கையை பிற மாநிலங்கள் ஏற்கும்போது தமிழ்நாடு மட்டும் ஏற்க மறுப்பது ஏன்? புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்றுக் கொண்டால்தான் கல்வி நிதி விடுவிக்கப்படும். புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்காத பட்சத்தில் ரூ. 2 ஆயிரம் கோடியை விடுவிக்க சட்டத்தில் இடமில்லை. அரசியல் காரணங்களுக்காகவே தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு எதிர்க்கிறது" எனத் தெரிவித்தார்.
இதற்கு தமிழ்நாடு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். குறிப்பாக, முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி த.வெ.க தலைவர் விஜய் வரை பலரும் இந்தக் கூற்றுக்கு எதிர்வினையாற்றி இருந்தனர். இந்த சூழலில் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக பேசும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும், தாங்கள் நடத்தி வரும் பள்ளியில் இந்தி மொழியை கற்பித்து வருவதாக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இது குறித்து இன்று பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் உரையாற்றினார். அப்போது, "நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய், தனியார் சி.பி.எஸ்.இ பள்ளி ஒன்றை பதூர் பகுதியில் நடத்தி வருகிறார். அப்பள்ளியின் பெயர் விஜய் வித்யாஷ்ரம். ஜோசஃப் விஜய் என்கின்ற பெயரில் அப்பள்ளி பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவருடைய இடத்தை 2017-ஆம் ஆண்டில் இருந்து 2052-ஆம் ஆண்டு வரை ஒரு அறக்கட்டளைக்கு 35 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு கொடுத்து இருக்கிறார். அந்த அறக்கட்டளை எஸ்.ஏ. சந்திரகேகரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எஸ்.ஏ. சந்திரகேகரின் அறக்கட்டளை நடத்தக் கூடிய அந்தப் பள்ளி தான் விஜய் வித்யாஷ்ரம். அரசியல் தலைவர்கள் சி.பி.எஸ்.இ பள்ளி நடத்துகின்றனர். அவர்கள் நடத்தும் பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்படுகிறது.
அரசியல் தலைவர்களின் சொந்தக் குழந்தைகள் ஃப்ரெஞ்சு பயில்கின்றனர். குறிப்பாக, அன்பில் மகேஷின் சொந்தக் குழந்தை ஃப்ரெஞ்சு மொழி பயின்று வருகிறது. இத்தகைய அரசியல்வாதிகள், அரசு பள்ளியில் பயிலக் கூடிய மாணவர்கள், இரண்டு மொழிகள் மட்டுமே படிக்க வேண்டும் என எப்படி சொல்கின்றனர்?
விஜய், சீமான், அன்பில் மகேஷ் என எல்லோரும் இதே கருத்தை கூறுகின்றனர். கலாநிதி வீராசாமி எம்.பி-யின் குடும்பத்தினர், மெட்ரிக் பள்ளி நடத்துகின்றனர். இப்பள்ளியில் ஆங்கிலம் முதன்மையான மொழியாகவும், இரண்டாம் மொழியாக தமிழ், இந்தி, ஃப்ரெஞ்சு என எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளனர். மெட்ரிக் பள்ளியில் கூட தமிழ் மொழியை கட்டாயமாக்கவில்லை" எனக் கூறினார்.