தி.மு.க மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடம் தான் விஜய் தண்ணீர் காட்ட வேண்டும் என்றும், பா.ஜ.க-விடம் அல்ல எனவும் அக்கட்சி மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (மார்ச் 28) டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், "மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நான் சந்தித்தேன். இதேபோல், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவையும் சந்தித்தேன். தமிழக பா.ஜ.க-வின் வளர்ச்சி குறித்து ஆலோசித்தோம். 2026-ஆம் ஆண்டு தேர்தலை பொறுத்தவரை ஒரு விஷயத்தில் எல்லாரும் தெளிவாக இருக்கிறார்கள். தமிழகத்திற்கு முக்கிய தேர்தல் என்பதில் தெளிவாக இருக்கிறோம்.
தி.மு.க மீது பா.ஜ.க குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது. தி.மு.க செய்யும் தவறுகளை எங்கள் பார்வையில் மக்கள் முன்னிலையில் எடுத்து வைக்கிறோம். 2026-ஆம் ஆண்டு தேர்தலை தமிழக மக்களின் நலனுக்கான தேர்தலாக நான் பார்க்கின்றேன். கூட்டணிக்கான காலம், நேரம் மற்றும் அவகாசம் நிறைய இருக்கிறது.
பா.ஜ.க நலனை விட தமிழக மக்களின் நலன் முக்கியம். கூட்டணி குறித்து தகுந்த நேரத்தில் எங்களுடைய தலைவர்கள் பேசுவார்கள். மாநில தலைவராக என்னுடைய கருத்தை தெரிவித்துள்ளேன். 2026-ஆம் ஆண்டு, ஆட்சியில் இருந்து தி.மு.க இறக்கப்பட வேண்டும் என்பதையும் தெரிவித்துள்ளோம். கூட்டணி குறித்து இப்போதே பேச வேண்டிய அவசியம் இல்லை.
தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் தான் எங்கள் எதிரிகள். என் கட்சியை வளர்க்க வேண்டும் என்ற பணியை நான் செய்கிறேன். சில நேரத்தில் தமிழக மக்களின் நலன், கட்சியின் நலனை விட மேலோங்கி இருக்கிறது. தொண்டனாக வேலை செய்யக் கூட நான் தயாராக இருக்கிறேன்.
இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் விஜய் மற்றும் அவருடன் பேசுபவர்கள் அனைவரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். மைக்கில் பேசிவிட்டு, கைகாட்டிச் செல்வது மட்டுமே அரசியல் கிடையாது. களத்தில் நின்று வேலை பார்ப்பது தான் அரசியல்.
1973-ஆம் ஆண்டு கடைசியாக தொகுதி மறுவரையறை நடைபெற்றது. அப்போது இந்தியாவின் லோக்சபா தொகுதி எண்ணிக்கை 525-ல் இருந்து 545-ஆக உயர்த்தப்பட்டது. அப்போது உயர்த்தப்பட்ட தொகுதிகளில் தமிழ்நாட்டிற்கு எந்த தொகுதியும் கிடைக்கவில்லை. சில மாநிலங்களுக்கு மூன்று தொகுதிகள் வரை உயர்ந்தது. அப்போது இந்தியாவை காங்கிரசும், தமிழ்நாட்டை தி.மு.க-வும் ஆட்சி செய்தனர்.
நியாயப்படி தி.மு.க மீது தான் விஜய் குற்றச்சாட்டு வைக்க வேண்டும். காங்கிரஸ் மற்றும் தி.மு.க-விற்கு தான் விஜய் தண்ணீர் காட்ட வேண்டும். அரசியல் புரிதலோடு விஜய் பேச வேண்டும். ஊடக வெளிச்சத்திற்காக தான் பிரதமர் மோடி மீது விஜய் குற்றச்சாட்டு சுமத்துகிறார்" எனத் தெரிவித்தார்.