ஒரு அரசியல்வாதிக்கு அடித்து ஆடும் திறன் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள முன்னாள் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, இனி சிக்ஸர் அடிப்பது மட்டுமே தன்னுடைய வேலை என்று தெரிவித்துள்ளார்.
தமிழக பா.ஜ.க தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை விடுவிக்கப்பட்டுள்ளார். அப்பதவிக்கு, நயினார் நாகேந்திரனை தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்த சூழலில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அண்ணாமலை, இனி கடினமான கேள்விகளுக்கு நயினார் நாகேந்திரன் பதில் அளிப்பார் என்று கூறியுள்ளார். அதன்படி, "எல்லோருக்குமே ஒரு பிரச்சனை இருக்கிறது. இனி நான் சுதந்திரமாக பேச முடியும். முன்னதாக பொறுப்பு என்ற ஒரு கட்டுப்பாடு எனக்கு இருந்தது. இனி சாதாரண அண்ணாமலையாக என்னால் சுதந்திரமாக அரசியல் பேச முடியும்.
அடித்து ஆட வேண்டிய பாக்ஸிங் கலை எப்போதுமே ஒரு அரசியல்வாதிக்கு தேவைப்படுகிறது. இனி என்னுடைய பேச்சின் ஸ்டைலை நான் மாற்றப் போகிறேன். இதற்கு மேல் பக்குவமாக பேசுவதற்கு நயினார் நாகேந்திரன் இருக்கிறார்.
இனிமேல், கூட்டணி தொடர்பான கேள்விகளுக்கு நயினார் நாகேந்திரன் பதில் அளிப்பார். என்னை நோக்கி வரும் பந்துகளை மட்டும் நான் அடித்தால் இனி போதுமானதாக இருக்கும். கடினமான கேள்விகளுக்கு எல்லாம் நயினார் நாகேந்திரன் பதில் கூறுவார். இப்போது சிக்ஸர் அடிப்பது மட்டும் தான் என்னுடைய வேலை" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.