திருச்சி மாவட்டம், மன்னார்புரம் பகுதியில் அமைந்துள்ள ராணுவ மைதானத்தில் பா.ஜ.க சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்தும், ஏழை மாணவர்களுக்கு சமமான கல்வி வேண்டும் என்ற கொள்கையை முன்வைத்தும், டாஸ்மாக் ஊழலைக் கண்டித்தும் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "தேசியக் கல்விக் கொள்கையை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் 8 பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. ஏழைகளின் முன்னேற்றம் கல்வியை சார்ந்து இருக்க வேண்டும் என்பதற்காகவே புதிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது.
1 முதல் 5-ம் வகுப்பு வரை தாய்மொழியில்தான் கட்டாயம் படிக்க வேண்டும் என்பது இதில் உள்ள முக்கிய விஷயம். ஆனால், தமிழில் கட்டாயம் படிக்க வேண்டும் என்பதை தி.மு.க-வினர் சொல்ல மாட்டார்கள். வரைவு அறிக்கையில் 3-ஆம் மொழியாக கட்டாயம் இந்தி படிக்க வேண்டும் என்று இருந்தது. அதனை ஏதாவது ஒரு இந்திய மொழியை 3-வது மொழியாகப் படிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி மாற்றினார்.
மும்மொழிக் கொள்கை, தேசியக் கல்விக் கொள்கைக்காக கையெழுத்து இயக்கம் தொடங்கி 18 நாட்களில் 26 லட்சம் பேர் கையெழுத்திட்டுள்ளனர். இது ஒரு அரசியல் புரட்சி. மே இறுதிக்குள் ஒரு கோடியை எட்ட வேண்டும் என்பதே இலக்கு. தேசிய கல்விக் கொள்கைக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது. ஆனால், இதை மறைத்து தி.மு.க-வினர் அரசியல் செய்கின்றனர்.
தொகுதி மறுவரையறை மக்கள் தொகை அடிப்படையில் நடக்காது; விகிதாச்சார அடிப்படையில்தான் நடக்கும் என்று பிரதமர், உள்துறை அமைச்சர் தெரிவித்தும்கூட தேவையில்லாத ஒரு கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நடத்தியுள்ளார். கடந்த ஆண்டு தமிழகம் ரூ.1.62 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது. மொத்த கடன் தொகை ரூ. 9 லட்சம் கோடியாகும். இந்தியாவில் யாருமே இவ்வளவு கடன் வாங்கவில்லை. வரலாறு காணாத மோசமான ஆட்சிக்கு தமிழக மக்கள் 200 தொகுதிகளை எப்படித் தருவார்கள்?
தமிழகத்தில் பா.ஜ.க ஆட்சிக்கு வரும் போது தனியார் பள்ளிக்கு அனுமதி கிடையாது. அரசுப் பள்ளிகளை மேம்படுத்தி, ஒவ்வொரு பள்ளியையும் பி.எம்.ஸ்ரீ பள்ளியாக மாற்றுவோம்" எனக் கூறினார். இந்தக் கூட்டத்தில் பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மூத்த தலைவர் ஹெச். ராஜா, தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக, கூட்டத்திற்கு வந்திருந்த சில தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்களை பா.ஜ.க-வினர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
செய்தி - க. சண்முகவடிவேல்