பா.ஜ.க தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, இமயமலைக்கு ஆன்மிக பயணம் சென்றதாக தகவல் பரவி வருகிறது.
தமிழக பா.ஜ.க தலைவராக சுமார் நான்கு ஆண்டுகளாக பதவி வகித்தவர் அண்ணாமலை. இவரது தலைமையில் தமிழக சட்டமன்ற தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களை பா.ஜ.க சந்தித்துள்ளது.
இந்த சூழலில் தமிழக பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிப்பது தொடர்பான அறிவிப்பு வெளியானது. இந்தப் பதவிக்கு நயினார் நாகேந்திரனை தவிர வேறு கட்சி நிர்வாகிகள் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், அவர் போட்டியின்று தமிழக பா.ஜ.க தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதற்கான பதவி ஏற்பு விழா கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடத்தப்பட்டது.
எனினும், அண்ணாமலைக்கு தேசிய அளவிலான பொறுப்பு வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்திருந்தார். அதற்கு ஏற்ப பா.ஜ.க தேசிய பொதுக்குழு உறுப்பினராக அண்ணாமலை தேர்வு செய்யப்பட்டார். அவர் மட்டுமின்றி கட்சியின் மூத்த நிர்வாகிகளான தமிழிசை சௌந்தர்ராஜன், ஹெச். ராஜா, கரு. நாகராஜன், ராம சீனிவாசன் உள்ளிட்டோரும் பா.ஜ.க தேசிய பொதுக்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில், அண்ணாமலை இமயமலைக்கு ஆன்மிக பயணம் சென்றுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இது தொடர்பான புகைப்படத்தை பா.ஜ.க நிர்வாகியான வினோஜ் பி. செல்வம் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தில் அண்ணாமலை, ரஜினிகாந்த் ஸ்டைலில் பாபா போஸ் கொடுத்துள்ளார்.