தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை சென்னை தி.நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான கமலாயத்தில் இன்று (நவ.9) செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில். “என் மண் என் மக்கள் யாத்திரை மூலமாக சாமானிய மக்களின் மனதை அறிய முடிகிறது. தமிழ்நாட்டில் உள்ள சமூகங்களுக்கு எதிராக எப்படி திராவிட மாடல் ஆட்சி இருக்கிறது என்பது குறித்தும் அறிந்துகொண்டேன்.
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் சமூக அவலங்கள் நடைபெறுகின்றன. இதையெல்லாம் கண்கூடாக பார்க்க முடிகிறது. வேங்கை வயல் விவகாரத்தில் இன்னமும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.
பெரம்பலூரில் கல் குவாரி எடுக்க சென்ற பட்டியலின தலைவர்களை நிர்வாணப்படுத்தி கொடுமை செய்துள்ளார்கள். தாக்கிய நபர்கள் மீது எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.
இதேபோல் கிருஷ்ணகிரியில் பிரச்னைகள் உள்ளன. ஒரு இடத்தில் பட்டியலின இளைஞர்கள் மீது சிறுநீர் கழிக்கப்பட்டுள்ளது. இது மாதிரி தொடர்ச்சியான சமூக அவலங்களை திராவிட மாடல் ஆட்சியில் பார்க்க முடிகிறது.
ஆனால் சென்னையில் இருந்துக்கொண்டு தமி்ழ்நாடு நன்றாக உள்ளது என அறிக்கை அளிக்கின்றனர். ஆனால் தமிழ்நாடு நன்றாக இல்லை.” என்றார்.
தொடர்ந்து, “என் மண் என் மக்கள் நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள விரும்புகிறோம். ஆனால் அவர் கலந்துகொள்வார் என அதிகாரப்பூர்வமாக சொல்ல முடியாது. நாட்டில் நடக்கும் சூழலை பார்த்து, அப்போது சொல்லப்படும்” என்றார்.
தொடர்ந்து, ஸ்ரீரங்கத்தில் கோவில் முன்பு உள்ள பெரியார் சிலையின் கீழே பொறிக்கப்பட்டுள்ள வாசகங்களை அகற்றுவேன் என பேசியது குறித்து அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அண்ணாமலை, “பெரியார் மீது தமிழக பாரதிய ஜனதாவுக்கு மதிப்பு உள்ளது. அவர் சமூக அநீதிக்கு எதிராக போராடியுள்ளார். அதில் மாற்றுக்கருத்துஇல்லை.
ஆனால் கடவுள் இல்லை என கோவில் முன்புள்ள வாசகத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
இதை மக்களின் முன்னால் ஒரு விவாதமாக வைக்கிறோம். அவரின் சிலை மற்றும் கருத்துகள் மற்ற தலைவர்களுக்கு இருப்பது போல் பொதுஇடத்தில் இருக்க வேண்டும்.
கோவில் அமைந்துள்ள 100 மீட்டருக்குள் அந்த வாசகங்கள் இருப்பது பொருத்தமானது அல்ல. சில அரசியல் கட்சிகள் எதிர்க்கிறார்கள் என்றால் அவர்கள் குறித்தும் பெரியார் பேசியுள்ளார்.
சோ அவர்கள் இது பற்றி பேசியுள்ளார். அது ஆன்லைனில் கிடைக்கும். அதைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் திமுக பற்றியும் பேசியுள்ளார். திமுக இடத்தில் பெரியார் சிலை வைத்து 21ம் பக்கம் குறித்து எழுதி வைப்பார்களா? எனக் கேள்வியெழுப்பினார்.
மேலும், கம்யூனிஸ்டுகள் மற்றும் காங்கிரஸ் பற்றி அவர் பேசிய வார்த்தைகளை அந்தெந்த கட்சி அலுவலகங்களுக்கு முன்னால் வைக்க அவர்கள் சம்மதிப்பார்களா?
அவர்களுக்கு ஒரு நியாயம் இந்து மக்களுக்கு ஓர் நியாயமா? என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“