/indian-express-tamil/media/media_files/Of94JJ5zRlaGwK4Nrsrc.jpg)
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை நம் உழைப்பிற்கு நிச்சயம் மக்கள் அங்கீகாரம் அளிப்பார்கள் என்று நம்பிக்கை
மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியானதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி 40 இடங்களிலும் பா.ஜ.க தோல்வியைத் தழுவிய நிலையில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை நம் உழைப்பிற்கு நிச்சயம் மக்கள் அங்கீகாரம் அளிப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தேர்த முடிவுகள் குறித்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“அன்பார்ந்த வாக்காளர் பெருமக்களுக்கு, நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை ஆதரித்து தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெருமளவில் வாக்களித்த தமிழக மக்கள் அனைவருக்கும் இதயபூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இம்முறை நமது மக்களின் பிரதிநிதிகளாக பாராளுமன்றம் செல்ல முடியவில்லை என்ற வருத்தம் இருந்தாலும் வரும் காலங்களில் உங்களின் அன்பையும் அங்கீகாரத்தையும் பெற எங்கள் உழைப்பை இரட்டிப்பாக்குவோம்.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 10 ஆண்டுகளாக நாட்டின் வளங்களையும் சாமானிய மக்கள் வரிப்பணத்தையோ சுரண்டாமல் ஒரு மத்திய அமைச்சர் மீது கூட ஊழல் குற்றச்சாட்டு இல்லாத நல்லாட்சியை வழங்கி இருக்கிறார் என்பது நமக்கெல்லாம் பெருமை.
மேலும், நாட்டின் உட்கட்டமைப்பு விவசாயம் சாமானிய மக்கள், பெண்கள் மற்றும் இளைஞர் மேம்பாடு சார்ந்த திட்டங்களைச் செயல்படுத்தி, இடைத்தரகர்கள் இல்லாமல் அனைத்து பலன்களும் நேரடியாக மக்களைச் சென்றடைய வழிவகை செய்திருக்கிறார்.
பாரதப் பிரதமர் மோடியின் நலத்திட்டங்கள் தமிழகத்தின் அனைத்து தரப்பு பொதுமக்களையும் சென்றடைந்து இருக்கிறது என்பதை தற்போதைய தேர்தல் முடிவுகளில் தமிழக முழுவதும் பரவலாக கிடைத்துள்ள வாக்குகள் மூலம் அறிய முடிகிறது. மத்தியில் மீண்டும் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைய இருப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.
நமது தேசிய ஜனநாயக கூட்டணி தமிழக அரசியலில் தவிர்க்கவியலாத சக்தியாக தொடர தமிழக மக்கள் பெரும் ஆதரவளித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நமது பிரதமர் மோடியின் அடுத்த ஐந்து ஆண்டுகள் ஆட்சி நமது குழந்தைகளின் எதிர்காலத்தை முன்னிறுத்தியதாக அமையும்.
எங்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ள அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழக மக்கள் நலனுக்கான குரலாய் தேசிய ஜனநாயக கூட்டணியின் குரலும் தமிழக பா.ஜ.க-வின் குரலும் தொடர்ந்து ஒலிக்கும்.
தேர்தல் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு தன்னலமின்றி கடுமையாக உழைத்த தமிழக பா.ஜ.க சொந்தங்கள் தலைவர்கள் நிர்வாகிகள் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவருக்கும் தலைவணங்கி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வரும் காலங்களில் நமது மக்கள் நலனுக்கான நமது உழைப்பை இரட்டிப்பாக்குவோம், நம் உழைப்பிற்கு நமது மக்கள் நிச்சயம் அங்கீகாரம் அளிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.