தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து, போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் உளவுப் பிரிவு ஏ.டி.ஜி.பி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக மூத்த தலைவர்களுடன் சென்று சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் என்.ரவியை வியாழக்கிழமை (ஜூலை 21) சந்தித்தார். அப்போது, அண்ணாமலை ஆளுநர் ஆர்.என். ரவியிடம், போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் தமிழக உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது பரபரப்பு புகார் அளித்துள்ளார். டேவிட்சன் தேவாசீர்வாதத்தை உடனே சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என ஆளுநரிடம் அவர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
தற்போது தமிழ்நாடு உளவுத்துறை ஏடிஜிபி-யாக உள்ள டேவிட்சன் தேவாசீர்வாதம் மதுரை காவல்துறை ஆணையராக இருந்த போது 200-க்கும் மேற்பட்ட போலி பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளன என்று ஏற்கனவே பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு, இந்த பிரச்னை குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அண்ணாமலை கடிதம் எழுதியிருந்தார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தபோது, கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தில் பிளஸ் 2 மாணவி மர்மமான முறையில் இறந்தது குறித்தும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரம் குறித்தும் எடுத்துரைத்தார்.
அண்ணாமலை ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்தது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “பாஜக மூத்த தலைவர்களுடன் இணைந்து இன்று ஆளுநர் ஆர். என்.ரவியை சந்தித்தோம். திமுக அரசின் மீது எங்கள் அதிருப்தியைத் தெரிவித்தோம். கள்ளக்குறிச்சியில் அரசின் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்பட்டது குறித்தும் போலி பாஸ்போர்ட் ஊழல் வழக்கு விசாரணையை வேண்டுமென்றே முடக்கியது குறித்தும் எங்கள் அதிருப்தியைத் தெரிவித்தோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”