எங்கள் கூட்டணியில் பெரிய கட்சி அ.தி.மு.க தான், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தகுதி வாய்ந்தவராக இருக்க வேண்டும் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் மீண்டும் போட்டியிடுகிறது. காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் களமிறங்குகிறார்.
இதையும் படியுங்கள்: ஈரோடு இந்தியாவுக்கே வழிகாட்டும்: திருச்சியில் வீரமணி பேட்டி
அதேநேரம் அ.தி.மு.க இபி.எஸ் தரப்பில் வேட்பாளரை களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் இங்கு அ.தி.மு.க கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிட்டது. இதேபோல் ஓ.பி.எஸ் தரப்பும் ஈரோடு கிழக்கில் போட்டியிட முடிவு செய்துள்ளது.
இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் தரப்பும் இருவரும் தனித்தனியாக அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரினர். ஆனால், பா.ஜ.க இதுவரை முடிவை அறிவிக்கவில்லை. அதேநேரம் தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனேயே பா.ஜ.க தேர்தல் பணிக்குழுவை அமைத்தது. இதனால் பா.ஜ.க களமிறங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பா.ஜ.க போட்டியிட்டால் ஆதரவளிப்போம் என ஓ.பி.எஸ் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, இடைத்தேர்தல் என்பது ஒரு கட்சியின் வளர்ச்சியை அறிந்துக் கொள்வதற்கான பலப்பரீட்சை அல்ல. கூட்டணிக்கு என்று மரபு, தர்மம் உள்ளது. கூட்டணி தர்மப்படி நடந்துக் கொண்டால் தான், கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் மதிப்பு இருக்கும். மேலும் தி.மு.க – காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்த எதிர்த்து நிற்கும் கட்சி பலம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். மக்கள் ஆதரவை பெற்றிருக்க வேண்டும். வேட்பாளர் நன்கு அறிமுகமானவராக, தகுதி வாய்ந்தவராக இருக்க வேண்டும். அதற்கேற்ப கூட்டணியில் ஒரே வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும்.
எங்களுடைய கூட்டணியில் பெரிய கட்சி அ.தி.மு.க தான். ஈரோட்டில் இருந்து இதற்கு முன்னர் பல அ.தி.மு.க.,வினர் வெற்றி பெற்று, எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அமைச்சர்களாக வந்துள்ளனர். அதேநேரம் ஓ.பி.எஸ் அவர்களும் என்னை சந்தித்து சென்றிருக்கிறார். எனவே விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும். கூட்டணியில் நிற்கும் வேட்பாளர் வெற்றி பெற தேவையானதை செய்ய வேண்டியது பா.ஜ.க.,வின் கடமை, என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
இதன்மூலம் பா.ஜ.க ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், மேலும் அ.தி.மு.க பெரிய கட்சி என்றதன் மூலம் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு பா.ஜ.க ஆதரவளிக்க போகிறது என்றும் கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil