திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் நடைபெற்ற மூவர் படுகொலை சம்பவத்திற்கு நீதி கேட்டு பா.ஜ.க சார்பில் இன்று மாலை போராட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் கோவை வந்த பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
டங்ஸ்டன் விவகாரத்தில் மத்திய அரசு திட்டத்தை செயல்படுத்தாது எனக் கூறிய பின்பும் சட்டமன்றத்தில் அதற்கான தீர்மானம் நிறைவேற்றும் அவசியம் இல்லை. அண்ணா பல்கலைகழக பாலியல் விவகாரத்தில் குற்றவாளி தி.மு.க-வின் அனுதாபி எனக் கூறி முதல்வர் ஸ்டாலின் மக்களை திசை திருப்புகிறார்.
அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் கடந்த 15 நாட்களாக தி.மு.க அமைச்சர்கள் பல்வேறு விதமாக கருத்துக்களை தெரிவித்து வந்தனர். குறிப்பாக அதன் இரண்டாம் கட்ட தலைவர்கள் ஞானசேகரன் தி.மு.க வில் இல்லை என கூறினர். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அவர் தி.மு.க வில் இல்லை என தெரிவித்தார். இப்போது சட்டப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின், ஞானசேகரன் கட்சியின் அனுதாபி எனக் கூறி தப்பிக்க முயல்கிறார். மக்களை திசை திருப்புவதற்காக இந்த வார்த்தையை அவர் பயன்படுத்தி உள்ளார்.
இந்த விவகாரத்தில் தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் காவல் ஆய்வாளர் மீது எந்த தவறும் இல்லை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்பட்டது. ஆனால் இப்போது எஸ்.ஐ.டி ஒரு அதிகாரியை கைது செய்து உள்ளது. எவ்வாறு மாநில அரசு பொய்யான தகவல் அறிக்கையை கொடுக்க முடியும்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மூவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை வேண்டும், அதுவே தீர்வு என இன்று பா.ஜ.க சார்பில் போராட்டம் நடத்தவுள்ளோம்.
டங்ஸ்டன் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படாது என மத்திய அரசை கூறி உள்ளது. மேலும், மாநில அரசு இதில் முடிவு எடுக்க வேண்டும், அதற்கு எந்த நிர்பந்தமும் இல்லை எனவும் மத்திய அரசு கூறி உள்ளது. எனவே இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய முதல்வர் ஸ்டாலின் அதை செய்யாமல் உள்ளார். மூத்த அமைச்சர்களை மதுரைக்கு அனுப்பி மக்களோடு பேசி இருந்தால் இந்த மாபெரும் ஊர்வலம் நடைபெற்று இருக்காது.
பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேசியத்தைப் பொறுத்தவரையில், பெரியார் அவ்வாறு பேசியதற்கான ஆவணங்கள் என்னிடம் உள்ளது. அதைக் கொடுக்க தயாராக இருக்கிறேன். ஆனால் அதை இப்போது பொதுவெளியில் பேச வேண்டியதில்லை என கருதுகிறேன். காரணம் பொதுமக்கள் இப்போது அரசியலை மற்றொரு கண்ணோட்டத்தில் பார்க்கத் துவங்கி உள்ளனர். பெரியார் பேசியதை எல்லாம் இப்போது பேசினால் அது மக்களுக்கு அருவருப்பை தரும். அதே நேரத்தில், சீமானிடம் விசாரணைக்காக காவல் துறையினர் வந்தால் பெரியார் பேசியதற்கான ஆவணங்களை வழங்கவும் தயாராக உள்ளேன்.
கோவை உடையாம்பாளையம் பகுதியில் சாலையோர பீப் உணவகம் நடத்தி வந்த நபர்களோடு பா.ஜ.க உறுப்பினர் வாக்குவாதம் செய்த விவகாரத்தில், அந்த காணொளியை நானும் பார்த்தேன். முழு காணொளியை வெளியிடாமல் பீப் குறித்து அவர் பேசிய ஒரு நிமிட வீடியோ மட்டுமே வெளியிடப்பட்டு உள்ளது. இதற்காக பா.ஜ.க சார்பில் நடவடிக்கை எடுக்கக் கூறி காவல் துறையினிடனும் மனு அளிக்கப்பட்டு உள்ளது. அந்த பகுதியில் கோவிலின் அருகே மாட்டிறைச்சி உட்பட எல்லாவித அசைவ உணவுகளும் விற்க வேண்டாம் என கேட்டுக் கொண்டனர். அதுவே அந்த பா.ஜ.க தொண்டரின் நிலைப்பாடாக இருந்தது.
யு.ஜி.சி விவகாரத்தைப் பொறுத்த வரை, பிப்ரவரி 5 ஆம் தேதி வரை கருத்துக்களை அனுப்ப மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது, குறிப்பாக புதிய யு.ஜி.சி விதிமுறைகளின் மூலம் பேராசிரியர்களின் பணி உயர்வுக்கான நெட் தேர்வு வேண்டாம் என கூறப்பட்டு உள்ளது. மேலும் துணை வேந்தர் தேர்வில் ஆசிரியர் பணி மற்றும் ஆசிரியர் பணி தொடர்புடையவர்கள் நியமிக்கப்படலாம் என கூறப்பட்டு உள்ளது. துணைவேந்தர் தேர்வில் யு.ஜி.சி, பல்கலைக் கழகத்தின் செனட் மற்றும் ஆளுநர் என மூன்று தரப்பினரின் கருத்துகளும் பரிந்துரைகளும் ஏற்கப்பட்டு துணைவேந்தர்கள் தேர்வு செய்யப்படுவர். இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய அவசியம் இல்லை. பிப்ரவரி 5 ஆம் தேதி வரை எதிர்ப்பதற்கான கருத்துக்களை தெரிவித்து இருக்கலாம்.
இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.
செய்தி: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.