சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் 23 ஆம் தேதி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவரை கைது கடந்த 25 ஆம் தேதி செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை விசாரிக்க 3 பெண் அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழுவை அறிவித்தது. அண்ணாநகர் துணை கமிஷனர் சிநேக பிரியா தலைமையிலான 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. தொடர்ந்து, சைதாப்பேட்டை 9-வது கோர்ட்டில் ஞானசேகரனை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்தனர்.
போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கி மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதையடுத்து, குற்றவாளி ஞானசேகரனை எழும்பூரில் உள்ள சிறைத்துறை அலுவலகத்தில் வைத்து சிறப்புப் புலனாய்வுக் குழு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அண்ணாமலை பேச்சு
இந்நிலையில், மதுரை மேலூர் அ.வள்ளாலப்பட்டியில் டங்ஸ்டன் திட்ட ரத்துக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, அண்ணாபல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக பேசிய அவர், “யார் இந்த சார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். ஞானசேகரனின் மொபைல் ரெக்கார்ட் என்னிடம் உள்ளது. 23 டிசம்பர் யாரிடம் பேசினார் என்ற ரெக்கார்டு என்னிடம் உள்ளது. 24 ஆம் தேதி யாரிடம் பேசினார் என்பது உள்ளது. அதில் சில போலீஸ் அதிகாரிகளும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.
எல்லா வேலையும் அண்ணாமலையே செய்ய முடியாது. நான் மோப்பநாய் கிடையாது. யார் அந்த சார் என்பதை முதலில் சொல்லுங்கள். சட்டத்திற்கு புறம்பாகதான் நான் சி.டி.ஆர் (அழைப்பு விவர பதிவுகள்) எடுத்தேன். சி.டி.ஆர் எடுப்பதற்கு அதிகாரம் இல்லை. ஆனால் சி.டி.ஆர் என்னிடம் இருக்கிறது.
ஞானசேகரனின் ஒரு வருட கால் ரெக்கார்டு என்னிடம் உள்ளது. யார் யாரிடம் பேசினார்? எத்தனை முறை பேசினார்? 23 ஆம் தேதி குற்றம் செய்த பிறகு யாரிடம் பேசினார்? 25 ஆம் தேதி தான் எஃப்.ஐ.ஆர் போட்டு இருக்கிறார்கள். அதை எல்லாம் நான் ஒரு நாள் வெளியிட தான் போகிறேன் பொறுமை காக்கின்றேன்.
எஃப்.ஐ.ஆர் லீக்கானது யாரால் என்பது தான் கேட்கிறோம், இந்த விஷயத்தில் பத்திரிக்கையாளர்களோடு முழுமையாக நாங்கள் இருக்கின்றோம். சி.டி.ஆர் விரைவில் வெளியிட தான் போகிறோம். அந்த பொண்ணுக்கு நியாயம் கிடைக்குமா? என காத்துக் கொண்டிருக்கிறேன். வழக்கு கடைசி நிலைக்கு போகவில்லை வேறு எங்கோ திசை திரும்புகிறது.
அண்ணா யுனிவர்சிட்டிக்கு செல்லாத முதலமைச்சர் வல்லாளப்பட்டிக்கு வந்த போதே எங்கு அரசியல் உள்ளது என தெரிகிறது மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தும் போது வராத முதலமைச்சர், மக்கள் பேரணி சென்ற போது வராத முதலமைச்சர், எல்லாம் முடிந்தபின்னர் குடியரசு தினம் காலையில் கொடியேற்றி விட்டு அவசர அவசரமாக அவரை முந்தி யாரும் வந்து விடக்கூடாது என்பதற்காக வந்துவிட்டார்.
அதில் வேகம் காட்டிய முதலமைச்சர் அண்ணா பல்கலைக்கழக வழக்கில் ஏன் வேகம் காட்டவில்லை இது முழுசாக உங்கள் வழக்கு. நீங்கள் தான் முதலமைச்சர் ஞானசேகரனை கட்சியை விட்டு நீக்கவில்லை. நீங்கள் மீடியாவை மிரட்டும் வேலையை விடுங்கள்." என்று அவர் கூறியுள்ளார்.
ஞானசேகரனுக்கு தி.மு.க-வுடன் தொடர்பு இருப்பதாக அண்ணாமலை முன்பு குற்றம் சாட்டியிருந்தார். குற்றவாளி ஞானசேகரன் ஆளும் கட்சித் தலைவர்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். ஞானசேகரன் தி.மு.க. மாணவர் பிரிவு பொறுப்பாளர் என்று அவர் கூறியிருந்தார். ஆனால், அதனை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மறுத்து இருந்தார். இதனிடையே, பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கோரி, அண்ணாமலை தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொண்டார்.
முன்னதாக, குற்றம் சாட்டப்பட்டவர் யாரை "சார்" என்று குறிப்பிட்டார் என்பதை வெளியிட அ.தி.மு.க வலியுறுத்தியது. போராட்டங்களை நடத்திய அ.தி.மு.க-வினர், "யார் அந்த சார் ?" என்கிற போஸ்டர்களை மாநிலம் முழுதும் ஒட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.