/indian-express-tamil/media/media_files/2025/06/12/d4UhHdZbXthh1ysP4vZ0.jpg)
"2026-ல் கூட்டணி ஆட்சி என்று நான் சொல்லமாட்டேன். நான் பா.ஜ.க ஆட்சி என்று தான் சொல்வேன். பா.ஜ.க-வின் வளர்ச்சிக்காக கடைசி வரை பாடுபடுவேன், கட்சி எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன்" என்று அண்ணாமலை கூறியிருக்கிறார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் 11 ஆண்டு கால சாதனைகளை ஒட்டி, அதன் சிறப்புகளை எடுத்துரைக்கும் வகையில் பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு கோவை விமான நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில், பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் ஏ.பி முருகானந்தம், கோவை மாநகர மாவட்ட தலைவர் ரமேஷ் குமார், கோவை வடக்கு மாவட்ட தலைவர் மாரிமுத்து, மாநகர மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் ஆட்சியில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, மத்திய பா.ஜ.க அரசின் சாதனை விளக்க கையேட்டினையும் அண்ணாமலை வெளியிட்டார்.
இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது:-
மத்திய பாஜக அரசு ஒவ்வொரு தேர்தலின் போதும் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளது. மக்கள் ஒவ்வொரு தேர்தலின் போதும் பாஜக அளித்த தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்களையும் ஒப்பிட்டு பார்க்கலாம். அதுவே திமுக அரசு அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் உள்ளது. கடந்த தேர்தலில் தி.மு.க 512 வாக்குறுதிகள் கொடுத்திருந்தது அதில் 50 வாக்குறுதிகளை கூட நிறைவேற்ற வில்லை. ஒவ்வொரு மேடையிலும் முதல்வர் ஒவ்வொரு விதமான புள்ளி கணக்குகளை கூறுகிறார்.
2014 ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதிஇல் கூறியபடி பல கோடி ரூபாய் மதிப்பிலான கருப்பு பணங்கள் மீட்கப்பட்டுள்ளது, பழங்குடியினருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன, குறிப்பாக நாட்டின் ஜனாதிபதியாக பழங்குடி இனத்தைச் சேர்ந்த திரௌபதி முருமூ தேர்வு செய்யப்பட்டார், அதேபோல் ஆர்டிகள் 370 அகற்றப்பட்டு இந்தியாவோடு காஷ்மீர் இணைக்கப்பட்டது, மகளிருக்கு பாராளுமன்றத்தில் இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டது, ஆயுஷ்மான் பாரத் திட்டம், தூய்மை பாரத திட்டம், பயிர் கடன், பிரதமரின் கிசான் உதவித்திட்டம் என ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
நாட்டின் 75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது நாட்டில் ஒரு குடிசை வீடு கூட இருக்கக் கூடாது என முடிவெடுத்ததன் அடிப்படையில், பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ஏராளமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. சிறு குரு நடுத்தர தொழில் நிறுவனங்களை பொறுத்தவரை கோவை முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகும். அவர்களை ஊக்குவிக்கும் விதமாக முத்ரா கடனுதவி திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. முக்கிய தேர்தல் வாக்குறுதியான ராமர் கோவில் கட்டப்பட்டு 2024 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இவ்வாறு கடந்த 11 ஆண்டுகளில் பாஜகளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் நாட்டில் உள்ள மகளிர், பழங்குடியினர் ,விவசாயிகள் தொழில் முனைவோர் என அனைத்து தரப்பினரும் பயனடைந்துள்ளனர்.
மத்திய அரசின் திட்டங்களான ஜந்தன் யோஜனா, முத்ரா கடன் உதவி, ஜல்ஜீவன் திட்டம், தூய்மை பாரத திட்டம், உஜ்வாலா திட்டம், ஆவாஸ் யோஜனா, பி எம் கிஷான் நிதி உதவி திட்டம், பயிர் காப்பீடு திட்டம் என அனைத்திலும் தமிழகம் பயனடைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை, ரயில் நிலையங்கள் மேம்பாடு, புதிய விமான நிலையங்கள் உருவாக்குதல், துறைமுகங்கள் மேம்பாடு ஆகியவற்றிலும் தமிழ்நாடு பயனடைந்துள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை, மத்திய அரசுக்கு செலுத்திய ஒவ்வொரு ரூபாயும், நிதி உதவியாகவும் பல்வேறு திட்டங்களின் கீழும் அதே ஒரு ரூபாயாக மீண்டும் கொடுக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் வெளிப்படையாக புத்தகமாக வெளியிட்டுள்ளோம். ஆனால் திமுக அரசு எந்தவிதமான வெளிப்படை தன்மையும் இன்றி வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக கூறுகின்றனர்.
மத்திய அரசின் திட்டங்களான விஸ்வகர்மா யோஜனா திட்டம், பிரதமரின் இலவச மருந்தகத் திட்டம் ஆகியவற்றை தமிழகத்தில் திமுக அரசு அமல்படுத்த தடையாக உள்ளது. அதற்கு பதிலாக முதல்வர் மருந்தகம் என்றும், விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை மற்றொரு பெயரிலும் அமல்படுத்தி திட்டங்கள் மக்களை சென்றடைய முடியாத நிலையை உருவாக்கியுள்ளது.
கீழடி விவகாரத்தை பொருத்தவரை உரிய விவரங்களை மட்டுமே மத்திய அரசு சார்பில் கேட்கப்பட்டுள்ளது, இதை தமிழ் மாநிலம் வடமாநிலம் என பிரிப்பதாக அமைச்சர் தென்னரசு ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துக்களை கூறுகிறார்.
2026-ல் கூட்டணி ஆட்சி என்று நான் சொல்லமாட்டேன். நான் பா.ஜ.க ஆட்சி என்று தான் சொல்வேன். பா.ஜ.க-வின் வளர்ச்சிக்காக கடைசி வரை பாடுபடுவேன், கட்சி எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன், அ.தி.மு.க-பாஜக தொகுதி பங்கீடு குறித்து பிரதமருக்கு நான் கடிதம் எழுதவில்லை. கட்சி முடிவு பற்றி பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுவார். தமிழகத்தில் பா.ஜ.க கூடுதல் தொகுதிகளில் போட்டியிட வேண்டும். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அல்ல. பாஜக ஆட்சி அமையும்
இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.