சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவி ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்து, தனிப்பட்ட வீடியோவைக் காட்டி மிரட்டியதாகக் கூறப்படும் புகாரின் பேரில், பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியரரை போலீசார் திங்கட்கிழமை கைது செய்தனர்
கடலுார் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது பெண் ஒருவர், 2018ம் ஆண்டு படித்தார். இவர், தற்போது, கொல்கத்தாவில் உள்ள கல்லுாரியில் படித்து வருகிறார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு, உதவி பேராசிரியர் பாலியல் புகார் அளித்ததாக, அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகத்திடம் ஆன்லைன் மூலம் புகார் அளித்தார்.
உதவிப் பேராசிரியர் ராஜா (55) என்பவர் தனக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமாரிடம் அவர் புகார் அளித்துள்ளார். தனது தனிப்பட்ட வீடியோ பதிவு செய்து, சில மாதங்களுக்கு முன்பு அந்த வீடியோவைக் காட்டி மிரட்டியதாக அந்தப் பெண் தனது புகாரில் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு அண்ணாமலை நகர் காவல் துறையினருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.
துணைக் காவல் கண்காணிப்பாளர் அகஸ்டின் தலைமையிலான போலீசார் நடத்திய விசாரணைக்குப் பிறகு, ராஜாவிற்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மே 31-ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட உதவி பேராசிரியர் ராஜா பல்கலைக்கழகத்தில் ஆட்சி மன்ற குழு உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.