Advertisment

ராமர் கோவிலின் சிறப்பு, ஆன்மிகம் தெரிந்த மாதிரி பேசும் இ.பி.எஸ்-க்கு புரியாது; அண்ணாமலை

ராமர் கோவிலின் சிறப்பு குறித்து ஆன்மிகம் பற்றி தெரிந்தவர்களுக்கு புரியும், ஆன்மிகம் தெரிந்த மாதிரி பேசும் எடப்பாடி பழனிசாமிக்கு புரியாது; கோவையில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேச்சு

author-image
WebDesk
New Update
Annamalai

ராமர் கோவிலின் சிறப்பு குறித்து ஆன்மிகம் பற்றி தெரிந்தவர்களுக்கு புரியும், ஆன்மிகம் தெரிந்த மாதிரி பேசும் எடப்பாடி பழனிசாமிக்கு புரியாது; கோவையில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேச்சு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கோவை வெள்ளலூர் பகுதியில் கோவை தெற்கு மாவட்ட பா.ஜ.க சார்பில் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட ரேக்ளா வண்டிகள், காளைகள் பங்கேற்றன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் மாற்றுக் கட்சிகளை சேர்ந்தவர்கள் பா.ஜ.க.,வில் இணைந்தனர்.

Advertisment

இதனையடுத்து பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “கலைஞர் கருணாநிதி பெயரில் ஏறு தழுவுதல் மைதானம் திறந்து வைத்த போது, முதலமைச்சர் ஸ்டாலின் நிறைய பொய்களை பேசியுள்ளார். ஜல்லிக்கட்டு, ரேக்ளா போட்டிகள் நடக்க காரணம் மோடி தான். 2006 ஆம் ஆண்டு ரேக்ளா போட்டிக்கு தான் முதலில் தடை விதிக்கப்பட்டது.

ஜெய்ராம் ரமேஷ் ஜல்லிக்கட்டை காட்டு மிரண்டி விளையாட்டு என்றார். காங்கிரஸ் ஆட்சியில் காட்சிபடுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலில் காளையையும் சேர்த்தார்கள். அதனால் ஜல்லிக்கட்டு, ரேக்ளா உள்ளிட்டவை தடை செய்யப்பட்டது. இதையெல்லாம் கைகட்டி வேடிக்கை பார்த்தவர் ஸ்டாலின். காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட அரசாணையில் இருந்து பா.ஜ.க அரசு காளையை நீக்கியது. மத்திய பா.ஜ.க அரசு ஆதரவால் தான் ஜல்லிக்கட்டு உள்ளிட்டவை மீதான தடை நீங்கியது. தடைக்கு காரணமாக இருந்த கலைஞர் கருணாநிதி பெயரை ஏறு தழுவுதல் மைதானத்திற்கு வைக்க கூடாது.

2024 பாராளுமன்ற தேர்தலில் மோடி கரங்களை வலுப்படுத்த மாற்று கட்சியினர் பா.ஜ.க.,வில் இணைந்துள்ளனர். முரண்பாடு இல்லாதவர்கள் ஒரு கூட்டணியில் இருக்கிறார்கள். இந்தியா கூட்டணியில்  மேற்கு வங்கம், பஞ்சாப், ஹரியானாவில் பிரச்சினை உள்ளது. இந்தியா கூட்டணி பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட பிரச்சினையே நிதிஷ்குமார் வெளியேற காரணம். இந்தியா கூட்டணி ஆரம்பிக்கவும், மற்ற கட்சிகளை சேர்க்கவும் காரணம் நிதிஷ்குமார் தான். அவரே வெளியே வந்துள்ளார். இது பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி என்பதை காட்டுகிறது. மோடி எதிர்ப்பு என்ற ஒரே அஜெண்டாவை தவிர வேறு எந்த கொள்கையும் இந்தியா கூட்டணியில் இல்லை.

தி.மு.க தேர்தல் அறிக்கையில் 3.50 இலட்சம் பேருக்கு அரசு வேலை தருவோம் என்றார்கள். ஆனால் இரண்டரை ஆண்டுகளில் 10,321 பேருக்கு தான் வேலை தந்துள்ளார்கள். கிராம பகுதிகளில் 50 சதவீத காவலர்கள் பற்றாக்குறை உள்ளது. கிராம பகுதிகளில் வழிப்பறி, கொலைகள் அதிகமாக நடக்கிறது. பல்லடத்தில் பத்திரிகையாளர் மீதான தாக்குதலை ஏற்றுக் கொள்ள முடியாது. முதலமைச்சர் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு செயல் இழந்துள்ளது.

கேரள ஆளுநர் தர்ணா செய்த பிறகு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் ஆளுநர் எது பேசினாலும் குற்றம் கண்டு பிடிக்கிறார்கள். தமிழிசை சௌந்தரராஜனிடம் வம்படி சண்டை செய்கிறார்கள். இப்படி நடப்பது நல்லதல்ல. அரசியல் அதிகாரம் முதல்வருக்கு தான் உள்ளது. விதிமீறலை தான் கவர்னர் பார்க்கிறார். இது நல்ல அரசியல் அல்ல. பினராயி விஜயன், ஸ்டாலின் ஆகியோர் ஆளுநர் குறித்து பயன்படுத்தும் வார்த்தைகள் ஏற்புடையது அல்ல.

வேங்கைவயல், தி.மு.க எம்.எல்.ஏ. மகன் வீட்டில் பெண்ணுக்கு நடந்த சித்ரவதை, இரட்டை டம்ளர் பிரச்சனை, தமிழகத்தில் அதிக வன்கொடுமை வழக்குகள் பதிவாவது பற்றி திருமாவளவன் பேசவில்லை. மற்றவர்கள் தாக்கி பேசப்பேச நாம் வளர்கிறோம் என அர்த்தம். திருமாவளவன் என்னை ஆட்டு குட்டி என்றது எனக்கு பெருமை தான். மத்திய அமைச்சரவையில் 76 அமைச்சர்களில் 12 அமைச்சர் பட்டியலினத்தவர். அதுவே தமிழகத்தில் 35 பேரில் 3 பேர் மட்டுமே பட்டியலினத்தை சேர்ந்தவர்கள். அதனால் ஸ்டாலினை கண்டிக்கிறோம் என திருமாவளவன் தீர்மானம் போட்டிருக்க வேண்டும். திருமாவளவன் போட்ட தீர்மானங்கள் எல்லாம் பச்சை பொய். 2, 3 சீட்டுக்காக நாடகம் போட்டுள்ளார். சமூகநீதி பற்றி பேச திருமாவளவனுக்கு தகுதியில்லை. அவர் ஒரு அரசியல் வியாபாரி.

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பா.ஜ.க.,வைக் கண்டால் பயம். பா.ஜ.க பற்றி இப்படி அப்படி என பேசுவது தான் அவர் வேலை. களத்தில் வியர்வையை சிந்தி நாங்கள் வேலை செய்கிறோம். கள நிலவரம் என்ன என எங்களுக்கு தெரியும். 2024 தேர்தல் முடிவு வந்ததும் முதல்வர் கருத்து பற்றி பேசிக் கொள்ளலாம். எங்கள் கட்சிக்கு யாரும் அறிவுரை சொல்ல வேண்டாம். பங்காளி, பகையாளி என்பவர்கள் ஓரமாக அமர்ந்து வேடிக்கை பார்க்கட்டும். அ.தி.மு.க.,வினர் அண்ணாமலையை மாற்ற சொல்லி டெல்லிக்கு சென்று நாடகம் நடத்தட்டும். தி.மு.க தீய சக்தியை அழிக்கும் குறிக்கோளோடு வேலை செய்கிறேன்.

இந்தியாவில் அதிக வெளிநாடு பயணம் செல்லும் முதல்வர் ஸ்டாலின் தான். அவர் எதற்காக வெளிநாடு செல்கிறார் என்ற உண்மையை சொல்ல வேண்டும். விஜய் உட்பட யாரும் அரசியலுக்கு வரலாம். பல கோவில் இருந்தாலும், அயோத்தி குழந்தை ராமர் கோவில் சிறப்பு வாய்ந்தது. இது ஆன்மிகம் பற்றி தெரிந்தவர்களுக்கு புரியும். ஆன்மிகம் தெரிந்த மாதிரி பேசும் எடப்பாடி பழனிசாமிக்கு புரியாது. இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

பி.ரஹ்மான், கோவை

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp Coimbatore Annamalai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment