அமமுகவிலிருந்து நாஞ்சில் சம்பத் விலகல் : அரசியலில் இருந்து விலகுவதாகவும் அறிவிப்பு

’டிடிவி.தினகரன் ஆரம்பித்த கட்சியில் திராவிடமும், அண்ணாவும் இல்லாத இயக்கத்தில் என்னால் இருக்க முடியாது’ என்று கூறிய நாஞ்சில் சம்பத்

டிடிவி.தினகரன் ஆரம்பித்த அமமுகவில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகியதாக திடீரென அறிவித்துள்ளார்.

அ.இ.அ.தி.மு.க.வின் கொள்கை பரப்பு செயலாளராக இருந்தவர் நாஞ்சில் சம்பத். ஜெயலலிதா மறைவுக்குப் பின், அவர் அரசியலில் இருந்து சில மாதங்கள் ஒதுங்கியிருந்தார். அதன் பின்னர் சசிகலா தலைமையிலான அணியில் இணைந்து செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில் கடந்த 15ம் தேதி டிடிவி.தினகரன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை உருவாக்குவதாக அறிவித்தார். ‘கட்சியில் திராவிடமும், அண்ணாவும் இல்லாத இயக்கத்தில் என்னால் இருக்க முடியாது’ என்று கன்னியாகுமரியில் நாஞ்சில் சம்பத் கூறினார்.
மேலும், டிடிவி.தினகரன் ஆரம்பித்த கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

அதோடு, ‘எம்.ஜி.ஆர்., அவருக்குப் பின்னால் வந்த ஜெயலலிதாவும் திராவிடத்தை தவிர்த்துவிட்டு அரசியல் நடத்த முடியாது என்பதை தெளிவாக உணர்ந்திருந்தார்கள். திராவிடத்தை மையமாக வைத்தே அவர்கள் ஆட்சி நடத்தினார்கள்’ என்றும் தெரிவித்தார்.

‘தினகரன் ஆரம்பித்த கட்சியில் இருந்து விலகுவதால், எடப்பாடி-ஓபிஎஸ் அணியில் இணைவேன் என கனவிலும் நினைக்க வேண்டாம். இனி அரசியலில் எந்த சிமிழிலும் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை. அரசியலில் இருந்து விலகுவதோடு, இனி என்னை இலக்கிய மேடைகளில் காணலாம்’ என்றும் தெரிவித்துள்ளார்.

அதிமுக பிளவுப்பட்டு நின்ற போதும் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அடுத்த சில வாரங்களில் சசிகலாவை சந்தித்து அவரது அணியில் இணைந்து செயல்பட்டார். மீடியாக்களில் சசிகலா அணிக்கு ஆதரவாக பேசி வந்தார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close