Annual Solar Eclipse 2019 : வளைவு சூரிய கிரகணத்தையொட்டி, தமிழகம் மட்டுமல்லாது நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் நடை அடைக்கப்பட்டுள்ளன.
இன்று காணப்பட்டது அரிய வகை சூரிய கிரகணமா ?
அரிய வளைவு சூரிய கிரகணம், சவுதி அரேபியா, தமிழகத்தின் ஊட்டி பகுதிகளில் தெரிய துவங்கியுள்ளது.
சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வருவதே சூரிய கிரகணம் ஆகும். அப்போது பூமி, சூரியன் ஆகிய இரண்டிற்கும் நடுவில் வரும் சந்திரன், பூமியில் இருந்து சூரியனை பார்க்க முடியாதபடி மறைத்துக் கொள்ளும். நாளை ( 26ம் தேதி) ஏற்படவுள்ள சூரிய கிரகணம் ”வளைவு சூரிய கிரகணம்” என்று அழைக்கப்படுகிறது. அதாவது சூரியனை முழுமையாக மறைத்துக் கொள்ளாமல் நடுப்பகுதியை மட்டுமே மறைத்துக் கொள்ளும்.
இந்த அரிய வளைவு சூரிய கிரகணம், ஊட்டி, கரூர், கொச்சி, ஆமதாபாத், புவேனஸ்வர் உள்ளிட்ட பகுதிகளில் தெரிய துவங்கியுள்ளது. தமிழகத்தின் 9 மாவட்ட மக்கள் இந்த வளைவு சூரிய கிரகணத்தை பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளைவு சூரிய கிரகணத்தையொட்டி, தமிழகம் மட்டுமல்லாது நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் நடை அடைக்கப்பட்டுள்ளன.
திருப்பதி ஏழுமலையான் கோயில் : சூரிய கிரகணத்தை முன்னிட்டு, திருமலை ஏழுமலையான் கோவில், 13 மணி நேரம் மூடப்பட்டுள்ளது. திருமலை ஏழுமலையான் கோவில், கிரகணத்திற்கு, ஆறு மணி நேரத்திற்கு முன், நடைசாத்தப்படுவது வழக்கம். இன்று காலை, 8:08 மணி முதல், 11:19 மணிவரை சூரிய கிரகணம் உள்ளதால், நேற்று (டிசம்பர் 25ம் தேதி) இரவு, 11:00 மணிக்கு கோவில் நடைசாத்தப்பட்டது.
திருமலையில் உள்ள அன்னதான கூடம், தரிசன வரிசைகள், காத்திருப்பு அறைகள், லட்டு மற்றும் பிரசாதம் தயாரிக்கும் மடப்பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. அன்னதானம் வழங்குவதும், இரவு, 10:00 மணியுடன் நிறுத்தப்பட்டது. சூரிய கிரகணம் முடிந்து, இன்று நண்பகல், 12:00 மணிக்கு, கோவில் நடை திறக்கப்படும். அதன்பின், சுத்தி செய்து, 2:00 மணிக்கு பின், பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இதை முன்னிட்டு, தேவஸ்தானம், பல ஆர்ஜித சேவைகளை ரத்து செய்துள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில், காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய கோயில்கள், சூரிய கிரகணத்தையொட்டி நடை அடைக்கப்பட்டுள்ளன.
திருநள்ளாறு கோயிலில் நடை அடைப்பு இல்லை : காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் வழக்கம் போல் நடைதிறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். சூரிய கிரகணத்தை முன்னிட்டு பல்வேறு கோயில்களில் நடை அடைக்கப்பட்டுள்ள நிலையில், திருநள்ளாறில் நடைதிறக்கப்பட்டுள்ளது.