கோவை மாவட்டம் வால்பாறை அருகே, சிறுத்தை தாக்கி 8 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களில் இது 4-வது உயிரிழப்பு என்பதால், வால்பாறை பகுதி மக்கள் சோகத்திலும், பதற்றத்திலும் உள்ளனர்.
வால்பாறை வாட்டர் ஃபால்ஸ் அருகே உள்ள வெவெர்லி பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் மகனான 8 வயது நூர் இஸ்லாம், தனது வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த சிறுத்தை அவனைத் தாக்கிக் கவ்விச் சென்றது. சிறுவனின் அலறல் சத்தம்கேட்டு பதறிப்போன பெற்றோர் மற்றும் உறவினர்கள், வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், காவல்துறையினர், சிறுவனைத் தேடியபோது, வீட்டின் அருகே இருந்த புதருக்குள் சடலமாகக் கிடந்ததைக் கண்டனர். சிறுவனின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடந்த ஜூலை மாதம், இதே வால்பாறை பச்சைமலை எஸ்டேட்டில், தனது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை சிறுத்தை தாக்கி கொன்றது. அப்போது, பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று, அந்தச் சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்துப் பிடித்தனர். பின்னர், அந்தச் சிறுத்தை டாப்சிலிப் அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டது.
ஆனால், இந்தச் சோகம் மறைவதற்குள் மீண்டும் ஒரு சிறுவனின் உயிரை சிறுத்தை பறித்துள்ளது. கடந்த சில மாதங்களாக வால்பாறையில் தொடர்ந்து நடைபெறும் சிறுத்தை தாக்குதல்களில் இது 4-வது உயிரிழப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொடர் சம்பவங்கள், வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் மனதில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்கள் மிகுந்த பயத்துடன் உள்ளனர்.