சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வு நலனைப் பாதிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி தூத்துக்குடி முழுவதும் போராட்டம் நடைபெற்றது. 99 நாட்கள் தூத்துக்குடியில் ஆங்காங்கே நடைபெற்ற போராட்டம், 100வது நாள் உச்சத்தைத் தொட்டது.
ஸ்டெர்லைட் போராட்டத்தின் 100வது நாளில் நடந்த போராட்டத்தில், பல்லாயிரக் கணக்கானோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக புறப்பட்டனர். இந்தப் போராட்டத்தை முறியடிக்க போலீசார் தடியடி நடத்தினர். பதிலுக்குப் போராட்டக்காரர்களும் கற்களை வீசித்தொடங்கினர்.
இவ்வாறு வெடித்த கலவரத்தை விரைவில் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர நினைத்தது காவல்துறை. அப்போது நடத்தப்பட்டத் துப்பாக்கி சூட்டில் 11 பேர் பலியானார்கள். போலீசார் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியானவர் தான் ஆந்தோனி செல்வராஜ்.
தூத்துக்குடியைச் சேர்ந்த செல்வராஜ் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். பெரிதாக ஏதும் வருமானம் ஈட்ட முடியவில்லை என்றாலும், சில ஆயிரம் சம்பாதித்து அந்த பணத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தது செல்வராஜின் குடும்பம்.
ஆந்தோனி செல்வராஜின் மகள் சமீபத்தில் பூப்பெய்தால். அவரின் மகளின் மஞ்சள் நீராட்டு விழாவைச் சிறப்பாக கொண்டாட நினைத்த அவர், சிறுக சிறுக சேமித்த பணத்தில் பத்திரிக்கை அடித்து, புது ஆடைகள் வாங்கி, வாசலில் பந்தல் கட்டினார்.
மகளின் மஞ்சள் நீராட்டு விழாவிற்குத் தனது அலுவலகத்தில் பணிபுரிபவர்களை அழைக்கக் கடந்த 22ம் தேதி காலை சென்றார். கை நிறைய அழைப்பிதழ்களுடன், மகிழ்ச்சியாகப் புறப்பட்டு சென்ற ஆந்தோனி செல்வராஜுக்கு காத்திருந்தது அவர் வாழ்வின் முடிவு.
போராட்டக்காரர்கள் அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணி சென்றிருந்த சமயத்தில் செல்வராஜும் அவ்வழியாகச் சென்றிருந்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலேயே செல்வராஜின் அலுவலகமும் இருப்பதால் அங்குச் சென்றவரின் மீது பாய்ந்தது துப்பாக்கியின் தோட்டா.
செல்வராஜ் கைகளில் இருந்து மகளின் மஞ்சள் நீராட்டு விழா அழைப்பிதழ்கள் சரிந்து விழ, வலியால் துடி துடித்தவாறு ரத்த வெள்ளத்தில் மடிந்து வீழ்ந்தார். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்து அவர் இறந்துவிட்டார் எனத் தெரிவித்தனர்.
மகள் பெரியவள் ஆன மகிழ்ச்சியில் செல்வராஜின் இல்லம் விழாக்கோலம் பூண்டிருக்க, அவரது குடும்பத்தினருக்கு மரணச் செய்தி அனுப்பப்பட்டது. ஆந்தோனி செல்வராஜின் மனைவி, மகன் மற்றும் மகள் கண்களில் இருந்த மகிழ்ச்சி காணாமல் போகச் சோகம் அப்பகுதி முழுவதும் சூழ்ந்துள்ளது.
தனது வீட்டின் வாசலில் மகளின் மஞ்சள் நீராட்டு விழாவிற்காக விரிக்கப்பட்ட பந்தல், தற்போது அவரின் சாவு பந்தலாக மாறியுள்ள அவலம் ஏற்பட்டுள்ளது. போலீசாரின் வெறிகொண்ட தாக்குதலில் அப்பாவி ஆந்தோனி செல்வராஜ் இரையாகியிருப்பதைக் கண்டு பொதுமக்கள் கொந்தளித்து வருகின்றனர்.