காஞ்சிபுரம் மாநகராட்சியில் பணியாற்றிய போது முறைகேட்டில் ஈடுபட்டதாக புகாரின் பேரில், திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
தற்போது திண்டுக்கல் மாநகராட்சியில் ஆணையராக பணிபுரிந்து வருகிறார் மகேஸ்வரி. இவர் திண்டுக்கல்லில் உள்ள ஆர்.எம்.காலனி 12-வது கிராஸ் தெருவில் குடியிருந்து வருகிறார்.
மகேஸ்வரி திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்தற்கு முன்பு, சென்னையிலுள்ள உள்ளாட்சிகள் முறைமன்ற நடுவத்தில் இணை இயக்குநராக இருந்தார். அதற்கு முன்னதாக காஞ்சிபுரம், பெரியகுளம் நகராட்சி ஆணையராக பணியாற்றினார்.
இந்நிலையில், மகேஸ்வரி காஞ்சிபுரம் நகராட்சி ஆணையராக இருந்தபோது, நடந்த அத்திவரதர் திருவிழாவின்போது பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்வதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த சிறப்பு நிதியை செலவிட்டதில் முறைகேடு நிகழ்ந்ததாக ஆணையராக இருந்த மகேஸ்வரி மீது புகார் எழுந்தது.
இந்த முறைகேடு புகாரின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து, திண்டுக்கல் எம்.ஆர். காலனியில் உள்ள மகேவரி வீட்டில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி நாகராஜன் தலைமையில் 10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் குழு அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
மகேஸ்வரியின் வீட்டில் மட்டுமில்லாமல், சுகாதார ஆய்வாளர்களின் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"